கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காரைக்காலில் இயங்கி வரும் மார்க் துறைமுகம் மட்டும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழுச் சுதந்திரத்துடன் இயங்கி வரலாமா என்று பா.ம.க கேள்வி எழுப்பியுள்ளது.

காரைக்கால் துறைமுகம்

இரண்டு தினங்களுக்கு முன்னதாக மார்க் துறைமுகத்துக்கு இந்தோனேஷியா நாட்டிலிருந்து நிலக்கரியை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் ஒன்று சரக்கை இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறது. இதுபோல் நேற்றும் (30.03.2020) ஈரான் நாட்டிலிருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்குக் கப்பல் ஒன்று மார்க் துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தக் கப்பல் தற்போது சரக்கு இறக்குவதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறது. நேற்று காலை காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மார்க் துறைமுகத்திற்குச் சென்ற தொழிற்சாலை ஆய்வாளர் செந்தில்வேலன், காவல்துறை கண்காணிப்பாளர் வீரவல்லவன் மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அடங்கிய குழு, கப்பலைப் பெயரளவில் ஆய்வு செய்து நிலக்கரி இறக்குவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று சான்று அளித்திருக்கிறது.

இதுபற்றி காரைக்கால் மாவட்ட பா.ம.கவினரிடம் பேசினோம்.

“காரைக்கால் மார்க் துறைமுகத்தில் ஓராண்டுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவசரக் கதியில் கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கவேண்டிய அவசியம் என்ன..? நாட்டிலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் அனைத்து விதமான பொழுதுபோக்கு சம்பந்தமான இடங்களும் மூடப்பட்டுள்ளன. கப்பல்கள் திரும்ப அனுப்பப்பட்டால் மார்க் துறைமுகத்திற்குக் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுமோ என்ற பயத்தில் தமிழகப் பகுதிகளில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி தேவை என்று பொய்யான காரணம் கூறி சரக்குக் கப்பல்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதால் மின் உற்பத்தியைக் குறைத்துள்ளோம் எனத் தமிழக மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவ்வாறே நிலக்கரி தேவை இருக்குமேயானால் மார்க் துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலக்கரியிலிருந்து அதன் தேவையைப் பூர்த்தி செய்யலாம் அல்லது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து அதன் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

காரைக்கால்

இதையெல்லாம் விடுத்து மார்க் துறைமுகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முற்றிலும் வியாபார நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார்கள் மாவட்ட நிர்வாகத்தினர்.

கப்பலிலிருந்து சரக்கு இறக்கப்பட்டதும் கப்பலைச் சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் எடுத்திருக்கிறார். அவரது ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு தினங்களுக்கு முன்னதாக நிலக்கரி இறக்கிய இந்தோனேஷியா கப்பலைச் சுத்தம் செய்துவிட்டு வாஞ்சூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். கப்பலைச் சுத்தம் செய்த தொழிலாளர்களிடம் எந்தவித மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் அவர்களை விரட்டவே, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே தங்களது சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்.

கொரோனா நோய் தொற்று அச்சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள துறைமுகமான தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் காரைக்கால் மார்க் துறைமுகம் மட்டும் தொடர்ந்து இயங்குவதற்கான காரணம் என்ன..? மக்களின் அத்தியாவசியப் பொருள்களையே இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் தேவைக்கு அதிகமாகவே இருக்கும் நிலக்கரியை காரைக்கால் துறைமுகத்தில் இறக்க அனுமதி அளித்ததின் மர்மம் என்ன..?

காரைக்கால் துறைமுகம்

தான் செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக காரைக்கால் மார்க் துறைமுகத்தின் மூலமாக, காரைக்கால் மருத்துவ மனைக்கு புதுச்சேரி முதல்வர் முன்னிலையில் ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பிற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மக்களின் உயிர் விஷயத்தில் இப்படி அலட்சியம் கட்டுவது ஏன்?

மத்திய அரசும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநரும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு சரக்கு இறக்கும் அனுமதிக்காக காத்திருக்கும் ஈரான் கப்பலை உடனடியாகத் திருப்பி அனுப்பவேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மதிக்காமல் தொடர்ந்து இயங்கிவரும் காரைக்கால் மார்க் துறைமுகத்தை மூடி சீல் வைப்பதுடன், துறைமுகத்திற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணை வைத்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

இதுபற்றி காரைக்கால் மார்க் துறைமுக மேலாளர் இராஜேஸ்வர ரெட்டியிடம் விளக்கம் கேட்டோம்.

“எந்த நாட்டிலிருந்து கப்பல் புறப்பட்டு வந்தாலும் 14 நாட்கள் கழித்தே அனுமதிக்கப்படுகின்றன. அந்தக் கப்பலில் உள்ள அனைவருக்கும் சென்னை துறைமுகத்திலுள்ள ஹெல்த் சென்டரில் சான்றிதழ் பெற்று, அதன்பின் பாண்டிச்சேரியிலுள்ள துறைமுக ஹெல்த் சென்டரில் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்ற பின்பே துறைமுகத்தில் அனுமதிக்கிறோம். அதே நேரத்தில் அந்தக் கப்பலில் உள்ள எவரும் கீழே இறங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஈரான் கப்பலிலிருந்து நிலக்கரி இறக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இறக்கி முடித்ததும் உடனே அக்கப்பல் புறப்பட்டுவிடும். துறைமுக வழிகாட்டுதல் சட்டப்படியே அனைத்தும் நடைபெறுகின்றன” என்று முடித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.