கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

வளங்கள் அனைத்தையும் அருளும் பெருங்குடி, அகத்தீஸ்வரர்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்!

Posted by Sakthi Vikatan on Wednesday, April 1, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, பெருங்குடி அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். கல்வெட்டுகளில் இந்த ஊர் `பெருமுடி’,’ திருப்பெருமுடி’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

இப்போது அவை மருவி, `பெருங்குடி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில், சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார் ஈசனார். அம்மன், சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள்.

பெருங்குடி அகத்தீஸ்வரர்

அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்’ என்றும், `அகத்தீஸ்வரமுடையார்’ என்றும் பெயர்பெற்றார். இறைவனார் பெயர், `பெருமுடி பரமேஸ்வரனார்’ என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது.

சோழர்களால் காவிரிக் கரையோரம் எழுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான கற்றளிகளில் இதுவும் ஒன்று. தற்போதிருக்கும் கற்றளி, ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.

கோட்டத்தில், தெற்கே தென்முகக் கடவுள் ஆலமர் செல்வர், மேற்கே மாதொருபாகன், வடக்கே பிரம்மா, மற்றும் சண்டிகேஸ்வரர் அருள்புரிகிறார்கள்.

கோயிலுக்குள் மகாகணபதி, வேங்கடாசலபதி, லட்சுமி நாராயணன் ஆகியோர் இடது பக்கமாகவும்; முருகன் தெய்வானையுடன் வலது பக்கத்திலும் அருள்புரிகிறார்கள். அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்த முருகப்பெருமான் இவர்.

முருகனுக்கு அருகே சப்த கன்னிகளில் வைஷ்ணவி, பிராமி, வாராகி ஆகியோர் அருள்புரிகிறார்கள். இந்த வாராகிக்கு, தேய்பிறை பஞ்சமி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுனி வாழை இலையில் பச்சரிசி இட்டு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால், வியாபாரத்தில் ஏற்றம் வரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

அகத்தீஸ்வரர் கோயில்

முருகனுக்கு நேர் எதிரே ஈசானிய மூலையில், சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியிருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதால் செவ்வாய் தோஷம், சனி தோஷம் இருப்பவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

கருவறைக்குள் அகத்தீஸ்வரர் சாய்ந்த திருமேனியாக வடக்கே சாய்ந்து தென்கிழக்கைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால், நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.