கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 7,35,821 பேர் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தச் சூழலில் உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத நாடுகள் எவை என்பதைக் கண்டறிய தொடங்கினோம்.

இந்தத் தேடலில் கொரோனா பாதிக்காத முதல் நாடாகக் கண்டறியப்பட்டது வட கொரியாதான். வடகொரியா தன் எல்லைகளை சீனாவுடனும் தென் கொரியாவுடனும் பகிர்ந்து வருகிறது. ஆனாலும், இந்த நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றே அரசு சொல்லி வருகிறது. இதற்கு மாறாக தென் கொரிய அரசு, வட கொரியாவின் 200 ராணுவ வீரர்கள் வைரஸால் உயிரிழந்துள்ளனர் எனக் கூறுகிறது. இந்தக் கருத்தை அதிபர் கிம் ஜான்க் ஊன் திட்டவட்டமாக மறுத்தே வருகிறார். வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த வட கொரியா அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
முதன்முதலில் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை மூடிய நாடு வட கொரியாதான். கடந்த வாரம் பியாங்கயான்க்கின் சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை தொற்று பாதிப்பிலிருந்து மீண்டதாக சொல்லி வெளியேற்றினர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ரூபாய் நோட்டுகள், கப்பலிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றில் தொற்று நீக்கம் செய்து வருகின்றனர். மேலும், தண்ணீர்த் தொட்டிகள் நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தி வருகின்றனர் .

மத்திய கிழக்கு நாடான இரானில் கொரோனா தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இதன் அண்டை நாடான டர்கமினிஸ்தானில் எந்தவொரு பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. இவர்கள் இரானுக்கு மருத்துவ உதவியையும் உணவுப் பொருள்களையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் வட கொரியாபோல இவர்களும் மக்கள் பயணம் செய்வதைக் கட்டுப்படுத்தியதே ஆகும். மேலும், வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. இதோடு சுற்றுப்புறத்தையும் சுகாதாரமான முறையில் பராமரித்து வருகிறது அந்நாட்டு அரசு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியூரில் இருக்கும் டர்கமினிஸ்தானைச் சேர்ந்தவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக முயற்சிகள் மேற்காள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அண்டை நாடான தஜகிஸ்தானிலும் இதுவரை கொரோனாவால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் பெர்சிய புது வருட கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்ற காரணத்தால் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதில் வறுமையும் போர்ச்சூழலும் கொண்ட ஏமன் நாட்டில் மட்டுமே எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்கெனவே அமெரிக்க கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதியிலிருந்து உதவியை விலக்கியுள்ளது. இதில் அந்நாட்டின் தலைநகரான சானாவும் அடங்கும். இப்போது உள்ள சூழலில் அங்கு தொற்று ஏற்பட்டால் கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலான ஒன்றாகி விடும்.
உள்நாட்டுப் போர் முடிந்து புதிதாக உருவாகியுள்ள தெற்கு சூடானிலும் இதுவரை கொரோனா பாதிப்பில்லை. இவற்றோடு ஆப்பிரிக்க நாடுகளான லெஸோதாவிலும் எந்த ஒரு பாதிப்பும் இதுவரை இல்லை. இந்நாடு மிகவும் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலாவி மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சா டோமே, பிரின்ஸ்பி ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் இல்லை. கொரோனா வைரஸ் கடல் தாண்டி பல நாடுகளுக்குப் பரவினாலும் சில தீவுகளைப் பாதிக்கவில்லை. இதில் குறிப்பாக, தெற்கு பசிபிக் கடற்கரையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இவற்றில் குக் தீவுகள், மார்சல் தீவுகள், மைக்ரொனேசியா, நாவுரு (Nauru), பாலாவு (Palau), சாமோ (Samoa), சாலமன் தீவுகள், துவாலு (tuvalu) மற்றும் வனுவாது (Vanuatu) ஆகியன அடங்கும்.

இந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களது நாடுகளை முடக்கியுள்ளன. உலக நாடுகள் அனைத்தையும் ஒரு பதம் பார்த்துவிட்டு இந்தத் தொற்று நோய் தங்கள் நாடுகளிலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளன. தொற்று ஏற்படாத நாடுகளில் வட கொரியாவைத் தவிர அனைத்துமே சிறிய நாடுகள் என்பதால் தொற்று ஏற்பட்டால் அதன் பாதிப்பிலிருந்து மீள்வது மிகக் கடினமான ஒன்றாகிவிடும். உலக நாடுகளுடன் தங்களது தொடர்பைத் துண்டித்து தங்கள் மக்களை கொரோனா தொற்றிலிருந்து இந்நாடுகள் பாதுகாத்து வருகின்றன. மேலே குறிப்பிட்ட நாடுகள், தங்கள் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. அந்த அடிப்படையில் அவை கொரோனா பாதிப்பு ஏற்படாத நாடுகளாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.