`டெல்லி நிஜாமுதீனில், `தப்லீக் ஜமாஅத்’ தலைமையகத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு பரவுகிறது’ என்ற ரீதியில் தற்போது சமூக ஊடகம் வழியே தீயாகப் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
இந்தச் செய்தியின் மூலம் கட்டமைக்கப்படும் வெறுப்புப் பிரசாரம் குறித்தும், சம்பந்தப்பட்டவர்களின் நிலை குறித்தும் அந்த அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசினோம். இதில் கிடைத்த தகவல்கள்…
`தப்லீக் ஜமாஅத்’ என்பது அரசியல் சாராத ஓர் ஆன்மிக அமைப்பு. இவ்வமைப்பிலுள்ளவர்கள் முழுக்க முழுக்க ஆன்மிக ரீதியிலான செயல்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றனர். அந்த வகையில், இவ்வமைப்பின் மாநாடு கடந்த 21-ம் தேதி டெல்லி நிஜாமுதீனில் தொடங்கியுள்ளது. அப்போது நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தப்லீக் அமைப்பினரும் இம்மாநாட்டில் கூட்டமாகக் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்புச் சூழல் மாறிவிட்டது. அப்போதே பலரும் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அவரவர் ஊர்களுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர். மாநாட்டின் முதல் 2 நாள் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டோர் ஏற்கெனவே தங்கள் ஊர்களுக்குப் போய்ச்சேர்ந்துவிட்டனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும்வரை மாநாட்டில் கலந்திருந்தவர்கள் தத்தமது ஊர்களுக்குப் போய்ச்சேர சரிவர போக்குவரத்து வசதி கிடைக்கப்பெறவில்லை.
மறுபடியும் 24-ம் தேதி `21 நாள் ஊரடங்கு’ உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதான இரண்டு நாள் கால இடைவெளியில் குறிப்பிட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டுள்ளனர். ஆனால், 24-ம் தேதிக்குப் பின்னராக ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து வசதி தடைபட… மாநாடு நடைபெற்ற நிஜாமுதீனிலேயே அவர்கள் தங்கியுள்ளனர். இப்படி தங்கியுள்ள அனைவரும் தற்போது டெல்லி அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய தப்லீக் அமைப்பினரும் கூட கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து கொண்டு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வையும் அறிவுறுத்தலையும் சம்பந்தப்பட்ட அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில், சமூக ஊடகம் வழியே பரப்பப்படும் செய்திகள் குறித்து, `மனிதநேய ஜனநாயகக் கட்சி’யின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் பேசினோம்…
“கொரோனா பாதிப்பிலிருந்து மீள வழிதேடி உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் இயக்கத்தின் சார்பில், நாங்களும்கூட அரசு அதிகாரிகளோடு இணைந்து கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ வசதி, பொதுமக்களுக்கான உணவு வசதி போன்ற உதவிகளைச் செய்துவருகிறோம். ஆனால், இம்மாதிரியான இக்கட்டான சூழலிலும்கூட, மதரீதியாக அரசியல் செய்துவரும் சிலர், திட்டமிட்டு இதுபோன்ற விஷமச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.
Also Read: `ரெயின்கோட்; ஹெல்மெட் மட்டுமே பாதுகாப்பு’ – கொரோனா போரில் உயிரைப் பணயம் வைக்கும் மருத்துவர்கள்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத அந்தச் சூழலில், தப்லீக் அமைப்பினர் மட்டுமல்லாது வேற்று மதங்களைச் சார்ந்த அமைப்பினரும்கூட நாடு முழுக்க ஆங்காங்கே தங்கள் மதக் கூட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருந்தனர். உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கூடிய கூட்டத்தைச் செய்திகளில் பார்த்தோம். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு நாடு முழுக்கப் பள்ளிவாசல்களில் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. மதரஸா, தர்காக்கள் பூட்டப்பட்டுள்ளன. அனைத்து மதத்தினரும் வந்து வழிபடுகின்ற 463 ஆண்டுக்கால வரலாற்றுச் சிறப்புகொண்ட நாகூர் தர்கா, முதன் முறையாக கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் மூடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உண்மை இவ்வாறிருக்க… தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் மீது மட்டும் உள்நோக்கத்துடன் கொரோனா பழியைச் சுமத்துவதென்பது திட்டமிட்ட மத அரசியல்” என்றார் காட்டமாக.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி நவாஸ்கனி இவ்விவகாரம் குறித்துப் பேசும்போது, “கூட்டம் கூடக்கூடாது என்ற அரசின் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முந்தைய நிகழ்வு ஒன்றை, இப்போது மதரீதியிலான பிரச்னையாக சிலர் திசை திருப்புவது வேதனையானது. ஏனெனில், பிப்ரவரியில் கூட கோவையில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் மதரீதியிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. அதைப்பற்றியெல்லாம் பேசாதவர்கள் குறிப்பிட்டு தப்லீக் ஜமா அத் கூட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவது திட்டமிட்ட மத அரசியல்.
`தற்கொலையே கூடாது’ என்று போதிக்கக்கூடிய மதத்தைச் சார்ந்தவர்கள்தான் தப்லீக் அமைப்பினர். இப்படியிருக்கும்போது, நம் மூலமாக ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடலாம் என்று சொன்னால், அது கொலைக்குச் சமமானது. தற்கொலையே கூடாது என்று சொல்லக்கூடியவர்கள், கொலை செய்யும் பாவச் செயலுக்குத் துணிவார்களா?

குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தி, சமூகரீதியாக அவர்களைத் திட்டமிட்டு ஒதுக்குவதற்கான முயற்சி இது. ஆனால், மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில், இவர்களது இந்த சூழ்ச்சியெல்லாம் பலிக்காது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபடும் முயற்சியில் இருக்கிற மக்கள், இதுபோன்ற வெறுப்பரசியல் செய்வோரையும் அடையாளம் கண்டு, விலகியிருக்கவேண்டும்” என்றார் தெளிவாக.
மனிதநேய மக்கள் கட்சி’யின் தலைவர் ஜவாஹிருல்லா, “உலகளாவிய கொரோனா தொற்றை இந்தியாவுக்குள் வரவிடாமல் தடுத்திருக்க வேண்டிய முதல் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அந்த வகையில், பிப்ரவரி மாத ஆரம்பத்திலேயே வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்தியிருந்தாலோ அல்லது கட்டுப்படுத்தியிருந்தாலோ நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது. `விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்தோம்’ என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால், எப்படி இந்தியாவுக்குள் கொரோனா பரவியது? ஆக, முதற்கட்ட தடுப்பு நடவடிக்கைகளைச் செய்யத் தவறியவர்கள், இப்போது மற்றவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க நினைப்பது தவறான அரசியல்.
மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல் புதைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, `இது ஆபத்து’ எனக்கூறி மக்களிடையே பீதியை உண்டுபண்ணும் நோக்கில் ஒருவர் வீடியோ பதிவு போடுகிறார். உலக சுகாதார நிறுவனமே, `கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இறந்துபோனவர்களைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யலாம்’ என்று அறிவித்துள்ளது. ஆனாலும் திட்டமிட்டு சிலர் மக்களைக் குழப்பி வருகின்றனர்.
மதம், சாதி, கொள்கை பார்த்தா நோய் வருகிறது? தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அடுத்த நபர் நெல்லையைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருமே தப்லீக் அமைப்பினரோடு எந்தவகையிலும் தொடர்பில்லாதவர்கள்தான். எனவே, தனிப்பட்ட விருப்பு வெறுப்பை முன்னிறுத்தி மத அரசியல் செய்வதென்பது கொரோனாவை விடவும் மோசமானது!” என்றார் உறுதியாக.

இந்நிலையில், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வழிகாட்டுக் குழுத் தலைவரான முகம்மது ரூஹுல் ஹக், இவ்விவகாரம் குறித்துப் பேசும்போது, “எங்கள் சமூக மக்களுக்கும் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஆடியோ ஒன்றை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். அதில், `டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாகவே கொரோனா பரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறோம். அந்தவகையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில், எங்கள் அமைப்பினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.” என்கிறார்.
Also Read: `லத்தி தேவையில்லை, அனைவருக்கும் அட்வான்ஸ் தருகிறேன்!’- போலீஸ் ஏ.சி-யின் நூதன தண்டனை #Corona
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு முன்னெச்சரிக்கையாகச் செயல்படவில்லை, கொரோனா தொற்றுப் பிரச்னையை மத ரீதியாக சிலர் திசை திருப்ப முயல்கின்றனர் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது,
“கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு எச்சரித்திருந்ததோடு, நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளது மத்திய அரசு. எனவே, மத்திய அரசு தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்ற புகாரே முகாந்திரம் இல்லாதது.
அடுத்ததாக, தப்லீக் ஜமாஅத் அமைப்பினர்தான், இந்தியாவில் கொரோனாவைப் பரப்பிவிட்டனர் என்று யாரும் மத ரீதியாகப் பாகுபடுத்திக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பியிருக்கும் அமைப்பு இது. எனவே, இவ்வமைப்பினர் இந்தியாவுக்குள் வந்து சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில்தான், கடந்த 21-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இவ்வமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில், தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோன 6 நபர்கள் குறித்து விசாரிக்கும்போதுதான் இந்த உண்மை வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும்கூட, இவ்வமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளார்.
இப்போதும்கூட, டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் அமைப்பினர் கூட்டம் நடத்திய அரங்கில் 2,000-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. முதல்கட்டமாக அவர்களில் சிலருக்குக் கொரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை செய்தபோது, பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, இவ்வமைப்பினர் தங்களைத் தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது உற்றார் உறவினர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அக்கறையிலும்தான் இந்தச் செய்தியைச் சொல்கிறோமே தவிர, மத ரீதியாக யாரையும் புண்படுத்துவதோ அல்லது அரசியல் செய்வதோ எங்களுடைய நோக்கம் அல்ல!” என்கிறார்.