தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் ஆபத்தை மக்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் புகார் கூறுகிறார்கள் செங்கல்பட்டு பகுதி மக்கள். செங்கல்பட்டு பகுதியில் நாளுக்குநாள் ஊரடங்கு உத்தரவு வலுவிழந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியாக இருப்பதாகவும் விவரிக்கிறார்கள்.

செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் வழக்கம்போலவே மக்கள் நெரிசல் உள்ளது. எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மார்க்கெட் நுழைவு வாயிலிலேயே வழியை அடைத்துக்கொண்டு எச்சில் தெறிக்க பலாப்பழத்தைக் கூவிக்கூவி விற்பனை செய்கிறார்கள். உள்ளே செல்லும் வழியில் காய்கறிகளோடு சேர்த்து கொரோனா மாஸ்க்கை கூவிக்கூவி விற்கிறார்கள். மாஸ்க்… மாஸ்க்… மாஸ்க்… கொரோனா மாஸ்க் 20 ரூபாய்ங்க…” என ரைமிங்காக கூவி விற்கிறார்கள். அந்த மாஸ்க் பற்றி அவர்களிடம் கேட்டோம். “வீட்ல இருக்கும் தையல் மிஷினில் காட்டன் துணியில நாடாவை தைச்சு கொண்டு வந்து விற்கிறோம். நல்லா வியாபாரம் ஆகுது. தைக்கத்தான் நேரமில்லை“ என்றார்கள். அந்த மாஸ்க் அணிவதால் எந்தப் பலனும் இல்லை என்றாலும், இன்றையச் சூழலில் காவல்துறையினருக்கு பயந்து சிலர் அந்த மாஸ்க்கை வாங்கிச் செல்கிறார்கள். துணியால் தைக்கப்பட்ட அந்த மாஸ்க்குகளை விற்பனை செய்பவர்களே அணிவதில்லை என்பதுதான் வேதனை.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். “ஒரு சில சூப்பர் மார்க்கெட்டுகளை மட்டும் அதிகாரிகள் மூடச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சில முக்கிய புள்ளிகளின் கடைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. நியூ இந்தியா சூப்பர் மார்க்கெட், அன்பு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சில கடைகளுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி கொடுத்திருப்பது ஏன்? இந்தக் கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குச் செல்லவில்லையா? அதுபோல் மெடிக்கல்களில் மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றின் விலையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மாஸ்க் மற்றும் சானிட்டைசர் போன்றவற்றை அதிக விலைக்கு விற்றால், பொதுமக்கள் புகார் செய்ய எண்கள் கொண்ட அறிவிப்பை ஒவ்வொரு கடையிலும் ஒட்ட வேண்டும். காய்கறி மார்க்கெட்டை பெரிய மைதானத்துக்கு மாற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 3 அடி இடைவெளி என்பதைக் கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது கட்டுப்படுத்தாமல் போனால் நிலைமை கைமீறிவிடும். அதிகாரிகள் வெளியில் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்’’ என்கிறார்.

அதிகாரிகள் செயல்பட்டால் மட்டுமே மக்கள் வீட்டிலேயே முடங்குவார்கள் என்ற நிலையில் இருக்கிறது செங்கல்பட்டு.