கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.
தஞ்சைப் பெருவுடையார்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்!
Posted by Sakthi Vikatan on Tuesday, March 31, 2020
அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில்.
தஞ்சைப் பெரிய கோயிலில் பெரிய நாயகியுடன் அருள்பாலிக்கிறார், பெருவுடையார் எனப்படும் பிரகதீஸ்வரர். ஒன்பது அடி உயரமுடைய பெரியநாயகி அம்மன், நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

இந்தத் தல விநாயகர், கன்னி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்தத் தலத்தில் நவகிரக சந்நிதிகள் இல்லை. பெருவுடையாரே நவகிரகங்களுக்கும் நாயகராக விளங்குகிறார். கோயிலில் நவ லிங்கங்கள் காணப்படுகின்றன. அதனால், நவகிரக தோஷ பரிகாரங்கள் இந்த லிங்கங்களுக்கே செய்யப்படுகின்றன.
இங்கு அருள்புரியும் வாராகி அம்மன், சக்தி மிக்கவளாகக் கருதப்படுகிறாள். பக்தர்கள் அதிக அளவில் கூடி வேண்டிகொள்வார்கள். திருமண வரம் கிட்டாதவர்கள், வாராகி அம்மனை வேண்டிக்கொண்டால் உடனே திருமணம் நடந்தேறும் என்பது ஐதிகம்.
பெருவேந்தன் ராஜராஜ சோழன் எழுப்பிய ஆலயத்தில், வேண்டிக்கொண்டவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மனத்துயர் நீங்கும், மன அமைதி கிட்டும்.

தற்போது பெரிய கோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகள் ராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன .
கி.பி 1003 – 1004 ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல்தான் கட்டி முடிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் இது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

`பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயிலில் பொறித்துவைத்திருக்கிறார், ராஜராஜன். இத்துடன், கோயில் கட்டுமானத்தில் யார் யாருக்கு பங்களிப்பு உண்டு என்கிற தகவல்களையும் அப்படியே கல்வெட்டில் பொறிக்கச்செய்து, கோயிலை ஒரு ஆவணக் காப்பகமாக உருவாக்கியுள்ளனர்.