“கொரோனா…” – ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Corona Virus

ஏனெனில் நம் உடலுக்குள் செல்லும் இந்த கோவிட்-19 கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 14 நாள்கள்வரை எந்தவொரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஒருவேளை 14 நாள்களைக் கடந்து இந்த வைரஸ் நம் உடலில் உயிர் வாழ்ந்தால் அது அதீத மூச்சுத்திணறலை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவரை உயிரிழக்க வைக்கிறது.

நம் உடல் ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்புசக்தியுடனும் இருந்தால் நம் உடலுக்குள் செல்லும் இந்த வைரஸ் 14 நாள்களுக்குள் அழிந்துவிடும். நாம் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உள்ளுக்குள் செல்லும் வைரஸ் பெருகி ரத்த ஓட்டத்தில் கலந்து நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது.

நுரையீரல்

கொரோனா வைரஸுக்கு “இதுதான் மருந்து” என்று எந்த மருந்துகளும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் உணவையே மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேலும் காரத்தன்மை உள்ள உணவுகள் வைரஸ் உடலுக்குள் வாழ்வதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே மருந்தாகும் உணவுகள் குறித்தும், காரத்தன்மை உணவுகள் பற்றியும் டயட்டீஷியன் அம்பிகா சேகரிடம் பேசினோம்.

Also Read: கொரோனா லாக்-டவுன் நேரத்தில் என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க முடியும்? சந்தேகங்களும் பதில்களும்…

“கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நாம் உண்ணும் ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும் ஒரு பி.ஹெச்(pH) இருக்கிறது.

டயட்டீஷியன் அம்பிகா சேகர்

pH என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் அடர்த்தியைப் பொறுத்து அமிலம், காரம் என்று வகைப்படுத்தப்படுகிறது. இதை அளவீடு செய்ய pH மீட்டர் என்ற அளவீட்டுக் கருவியும் உள்ளது.

(சில உணவுப்பொருள்களின் pH அளவு: ஆப்பிள்- 3.30-4.00, பீன்ஸ்- 5.60-6.50, சோளம்- 5.90-7.30, முட்டையின் வெள்ளைக்கரு-7.96, பூண்டு-5.8, இஞ்சி-5.60-5.90, பப்பாளி-5.20-6.00, டீ-7.2, காளான்-6.00-6.70)

Also Read: #FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

பொதுவாக பி.ஹெச் அளவீடு 1-ல் இருந்து 14வரை இருக்கிறது. இதில் 1-ல் இருந்து 6.9 வரை பி.ஹெச் உள்ள உணவுகள் அமிலத்தன்மை உள்ளவை எனப்படும். 7.1-ல் இருந்து 14வரை பி.ஹெச் உள்ள உணவுகள் காரத்தன்மை உணவுகள் எனப்படும்.

பி.ஹெச் அளவீடு

7 என்பது நியூட்ரல் பி.ஹெச். இதில் அமிலம் மற்றும் காரத்தன்மை சமமாக இருக்கும். நாம் அருந்தும் குடிநீரின் பி.ஹெச் 7. மற்றபடி நாம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், உணவுகள் எல்லாம் தனித்தனியே காரம் அல்லது அமிலத்தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

பி.ஹெச் 6 மற்றும் அதற்குக் கீழான அசிடிக் தன்மையே இந்தக் கொரோனா வைரஸ் வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்பதால் காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது. இது நம் வயிற்றில் வைரஸ் பெருகுவதற்கு ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தும்.

உணவுகள்

எனவே காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகள், நட்ஸ் வகைகள், பருப்புகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பழங்களில் ஆப்பிள், திராட்சை, மற்றும் சிட்ரஸ் வகைகளில் பொதுவாக அமிலத்தன்மை காணப்பட்டாலும் இவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை.

பொதுவாக நமக்குக் காய்ச்சல் ஏற்படும் நேரத்தில் மட்டும்தான் கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துப் பழகியிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு சூழலிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மிளகு, சீரகம் சேர்த்த ரசம், பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்த கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

பூண்டு, இஞ்சி

நாம் வெளியில் செல்ல வாய்ப்பில்லாமல் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் இந்த நிலையில் அதிக கொழுப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகம் கொழுப்பு உள்ள உணவுகள் அதீத கலோரிகள் கொண்டிருப்பதால் பெரிதாக உடலுழைப்பு இல்லாத நேரத்தில் அந்தக் கலோரிகள் உடலில் தங்கி உடல்பருமனையும் வேறு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அதிக கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

Also Read: வெட்டிவேர், புதினா, மாதுளை… எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்

அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை இவ்வேளையில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவற்றை எங்கிருந்து வாங்குகிறோம் என்பதில் கவனம் தேவை.

மீன்

சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படும் இடங்களில் மட்டுமே இவற்றை வாங்கி நன்றாகச் சுத்தம் செய்து முழுமையாக வேக வைத்து உண்ண வேண்டும். ஏற்கெனவே பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கும் அசைவ உணவுகளை வாங்கக் கூடாது. நெய், வெண்ணெய், சீஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை வயிற்றில் கோழை போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கி வயிற்றில் வைரஸ் தங்காமல் இருக்க உதவுகிறது.

கொரோனா வைரஸ் அதீத சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவர்கள் எல்லா உணவுப் பொருள்களையும் சூடாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பப்பாளி

குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். தண்ணீரில் சீரகம் கலந்து அருந்தலாம். சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கலாம். கிர்ணி, பப்பாளி, மாதுளை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார் அம்பிகா சேகர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.