ஊரடங்கால் பாதிக்கப்பட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தஞ்சாவூரில் தவித்த பல்வேறு ஊரைச் சேர்ந்த 19 பேர் மீட்கப்பட்டு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது அவர்கள், `மாற்று உடை இல்லாமல் அவதிப்படுகிறோம். எங்களைச் சொந்த ஊருக்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சையில் தங்கவைக்கப்பட்டவர்கள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தவித்த 19 பேர் மீட்கப்பட்டு வல்லம் அய்யனார் கோயில் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு அம்மா உணவகத்திலிருந்து உணவு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக அந்த இடத்தில் தங்கியிருக்கும் அவர்கள் மாற்றுவதற்கு உடைகள், குழந்தைக்குப் பால் உள்ளிட்டவை இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து அக்குழுவில் உள்ள ஒருவரிடம் பேசினோம், “சேலம் மாவட்டம் எடப்பாடி, சிவகங்கை, கும்பகோணம் உள்ளிட்ட வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த 6 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 19 பேர் இங்கு தங்கியிருக்கிறோம். நாங்கள் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டதால் செய்வதறியாமல் தவித்தோம்.

ஓய்வெடுக்கும் பெண்கள்

அப்போது பரிதவித்துக்கொண்டிருந்த எங்களைக் கவனித்த சிலர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே நேரில் வந்த அதிகாரிகள் எங்கள் மீது பரிவு காட்டியதுடன் ஊரடங்கு முடியும் வரை இங்கேயே தங்குவதற்கு ஏற்பாடும் செய்து கொடுத்தார்கள். எங்களுக்கு அம்மா உணவகத்திலிருந்து நேரா நேரத்திற்கு சாப்பாடு வந்துவிடும். அதைச் சாப்பிட்டுக்கொண்டு கையில் இருந்த பணத்தைச் செலவிற்கு வைத்துக்கொண்டு பால் உள்ளிட்ட மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டோம்.

Also Read: `காஷ்மீரில் இறந்த தஞ்சை ராணுவ வீரர்!’ – கொரோனா ஊரடங்கு உத்தரவால் கலங்கும் கிராம மக்கள்

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓடிவிட்ட நிலையில் கையில் இருந்த காசு முழுவதும் செலவாகிவிட்டது. மேலும் குளித்துவிட்டு உடுத்திக்கொள்ள வேறு ஆடைகளும் இல்லை. இதனால் பெண்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இங்கே இருக்கும் ஒரே ஒரு குழந்தைக்குப் போதுமான அளவு பால் வாங்கிக்கொடுக்கக் கூட முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள்

இதுவரை எங்களைக் காத்த அதிகாரிகளுக்கும் அரசுக்கும் நாங்க கடமைப்பட்டிருக்கோம். இப்போதைக்கு நாங்க எங்க சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். எங்க வீடுகளுக்கு எப்ப போய் சேர்கிறோமோ அப்பதான் எங்களுக்கு நிம்மதி. எங்களைத் தங்க வைத்தது போலவே ஒரு வாகனத்தை ஏற்பாடு செஞ்சு நாங்க ஊர் போய் சேர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நாங்க இங்க இருக்கும் வரை பெண்கள் உடுத்த புடவைகளும் மத்தவங்களுக்கு மாற்று உடைகளையும் ஏற்பாடு செஞ்சு கொடுக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.