ஊர் முழுக்க கொரோனோ பீதியைக் கிளப்ப, சோஷியல் டிஸ்டன்சிங் என்ற பதம், பிரதான இடம் பிடித்திருக்கிறது. அதைக் கடைப்பிடிக்கத் திரும்பிய பக்கமெல்லாம் திசைக்கொருவர் வலியுறுத்தி வருகின்றனர். தினமும் பள்ளி, கல்லூரி,வேலைக்கு போகும்போதெல்லாம் லீவு வாங்க ஓராயிரம் காரணங்களை சுமந்துகொண்டு குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருந்தவர்களை இப்போது முறுக்கு கயிற்றால் கட்டி வைத்ததுபோல கடந்த சில நாள்களாக `வீட்டுக்குள்ளேயே இரு’ எனக் கட்டிப்போட்டிருக்கிறது கொரோனா.

Representational Image

ஒரு ஞாயிறு, ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட, அதைத்தொடர்ந்து வரும் 21 நாள்களுக்கும் இந்த உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஒரு நாளையே வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாமல் பல்லாங்குழியிலிருந்து பனியாரம் வரை அழிவின் விளிம்பில் இருந்த அயிட்டங்களை எல்லாம் வீட்டிற்கு எடுத்து வந்து `லிவ்விங் மை லைஃப், ரீகலெக்டிங் மைசெல்ஃப்’ என ஸ்டேட்டஸ் போட்டான் ஆதித்தமிழன்.

இப்படிக் கடந்த குவாரன்டீன் நாள்களில் என்ன செய்தார்கள், இனி வரும் நாள்களில் என்னவெல்லாம் செய்வார்கள்?

சோஷியல் மீடியா:

corona

சும்மா நாளிலேயே சோஷியல் மீடியா பக்கம் உலாத்துபவர்கள், இந்த கொரோனோ நாள்களில் என்ன செய்வதென்று தெரியாமல் 24*7 சொந்தக்கதை சோகக்கதையோடு கொஞ்சம் கொரோனோ கதையையும் சேர்ந்து வைத்து சேவையாற்றுகிறார்கள். இதனால் எதை எடுக்க, எதை விடுக்க என சோஷியல் மீடியாவே ஸ்தம்பிக்கிறது. அரளி விதையிலிருந்து ஆவாரம் பூ வரை தெரிந்ததை எல்லாம் மருந்தாக்கி வாட்ஸப்பில் வைத்தியம் பார்க்க ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. `பொட்டேட்டோ பொரியல் செய்வது எப்படி? ஐந்தே நாள்களில் ஐந்து கிலோ எடை குறைப்பது எப்படி?’ என மறுபக்கம் சோஷியல் மீடியா லைவ்வில் வேறு வந்து கடமையைச் செய்கிறார்கள். இதெல்லாம் ஒருபக்கம் ஒன்வேயில் போய்க்கொண்டிருக்க, மறுபக்கம் கொரோனோ மீம்களும் போட்டுப்பொளக்கிறது. “இரவு 11 மணிக்கு 3-வது ஸ்டேஜ் ஆரம்பிக்கும்… எண்ணிக்கை ஆயிரங்களைத்தாண்டும்” என்றெல்லாம் வெதர்மேன் டீடெய்ல் போல ஃபேக் லெட்டர்பேடில் அட்ராசிட்டி செய்கிறார்கள்.

வதந்திகள்:

corona

கொரோனாவை ஓவர் டேக் செய்து, ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது அது குறித்தான வதந்திகள்தான். அதுவும் `பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்’ வகையறா வதந்திகள்தான் 360 டிகிரியில் விடாமல் சலங்கை கட்டி சுழற்றியடிக்கிறது. மக்கள் தொகையைக் குறைக்க அரசின் சதி, இலுமினாட்டிகள் செய்கின்ற செய்வினை, சூரிய ஒளியிலும் பரவும் அதனால்தான் ஊரடங்கு, தொடர்ந்து கைதட்டினால் அந்த ஒலியின் தாக்கம் தாங்காமல் கொரானா தானாகவே தற்கொலை செய்துகொள்ளும் என இஷ்டத்துக்கு கிளப்பிவிட, கொரோனோ மைண்ட் வாய்ஸ் பீ லைக்,`Am I a Joke to you?!’.

அந்த ஒரு நாள்:

corona

கடந்த ஞாயிறன்று மட்டும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட, பெரும்பாலானோர் தொலைக்காட்சி பக்கமும் சோஷியல் மீடியா பக்கமும் கும்பலாகக் குவிந்தனர். `அசைவம் சாப்பிடக் கூடாதுன்னுதான் ஞாயிற்றுக்கிழமையா பார்த்து ஊரடங்கு போட்டு இருக்காங்க’ என அசைவப் பிரியர்கள் ஒருபக்கம் சலம்ப, டிக்டாக் வீடியோ, சோஷியல் மீடியா பேஜில் ரேஷன் கடை க்யூ போல வரிசையாக லைவ் மேளாக்கள் என ஒரு வழியாக அந்த நாளை நகர்த்தினர்.

அப்போதுதான் எல்லோரும் காத்திருந்த அந்த கைதட்டும் வைபவம் வந்தது. அதுவரை ஆளுக்கொரு திசையில் தனித்திருந்தவர்கள் எல்லாம் திபுதிபுவென ஒன்றுகூடி, மதியம் சாப்பிட்ட தட்டையும், இரு கைகளையும் உபயோகித்து கரகோஷம் எழுப்பி புலகாங்கிதம் அடைந்தனர்.

வொர்க் ஃப்ரம் ஹோம்:

corona

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், வொர்க் ப்ரம் ஹோம் என மறுபக்கம் ஃபன் மெட்டீரியலோடு அலைந்துகொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். காலை 10 மணிக்கு அட்டெண்டன்ஸ் வைத்துவிட்டு, அரைத் தூக்கத்தில் வீடியோ காலிங்கில் மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டு மேரி கோல்ட் பிஸ்கெட்டில் எத்தனை ஹோல்ஸ் என சர்வே செய்துகொண்டிருப்பதிலேயே பொழுது கழிகிறது. ஆபிஸ் போனாலே, வேலை செய்யாமல் இருப்பது எப்படி என்பதில் கைதேர்ந்தவர்கள் இப்போது வீட்டிலிருந்து வேலை என்றால் கேட்கவா வேண்டும். புதைந்துபோன 90’ஸ் கேம்களைத் தோண்டியெடுத்து குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பது, சமைக்கிறேன் பேர்வழி என சுற்றி இருப்பவர்களை வதைப்பது, நண்பர்களுடன் வீடியோ காலிங் செய்து நட்பு வளர்ப்பது என வாட்ஸ்அப் டிரெயின்களைப் பார்த்தாலே தெரியும். இது ஒரு பக்கம் இருக்க, ஐ.டி-யில் இருப்பவர்களோ `வேலை… வேலை… வேலையோ வேலை’ என வீட்டுக்குள்ளே ஜாம்பிக்களாகத் திரிகிறார்களாம்.

எது எப்படியோ, கொரோனாவை பீதியாகவோ, வைரஸாகவோ டீல் செய்யாமல் கடன்காரனாக ஹேண்டில் செய்து வீட்டைவிட்டு தலைகாட்டாமல் பாதுகாப்பாக இருங்க மக்களே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.