பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனாவின் கொடுங்கரங்கள் ஒவ்வொரு நாளும் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் நீண்டு கொண்டே போகிறது. அதையொட்டிய ஊரடங்கு உத்தரவினால் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்துப் பிரிவினருமே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். இச்சூழலில் மக்களின் துயர் துடைக்க ஆங்காங்கே சில உதவிக்கரங்களும் முளைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஓர் உதவியினைச் செய்து ஏராளமான பாராட்டுகளைப் பெற்று வருகிறார் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா எட்டயபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராமனூத்து கிராம அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.க.இப்ராஹிம்.
இராமனூத்து கிராமத்தில் 250 வீடுகள் உள்ளன. அனைவருக்கும் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழில்.. இதில் சொந்த நிலம் இல்லாத 25 குடும்பத்தினர் மற்றவர்களின் வயல்களில் கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகின்றனர்.

சிலர் அருகில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளுக்குக் கூலி வேலைக்குச் சென்றும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். கொரோனா பரவலுக்குப்பின் யாரும் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத சூழலில் உள்ளனர். இதனால் இவர்களின் ஒட்டுமொத்த வருமானத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் சமைத்துச் சாப்பிடுவதற்குக்கூட இந்த 25 குடும்பத்தினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.
இதைத் தனது பள்ளி மாணவர்கள் மூலம் தெரிந்துகொண்ட மு.க.இப்ராஹிம் இராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழைக் குடும்பங்களுக்குத் தலா 600 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை தனது சொந்தச் செலவில் சமூக விலகலைக் கடைப்பிடித்து வீடு வீடாக நேரில் சென்று வழங்கி வந்துள்ளார். ஆசிரியர் மு.க.இப்ராஹிமின் இந்த உதவியால் 25 குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த 25 குடும்பத்தைச் சேர்ந்த பல பிள்ளைகள் இவருடைய பள்ளி மாணவர்கள்தான்.
தமிழில் வெளிவரும் முன்னணி இதழ்களில் சிறுவர்களுக்கான பாடல்கள் மற்றும் கவிதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவையும் தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர்களுக்கான புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரக் கிளையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
எழுத்தறிவிப்பது மட்டுமல்ல இதுபோன்ற இன்னல்களில் உதவிக்கரம் நீட்டுவதும் சமூக அக்கறையாளர்களின் கடமை என்பதை நிரூபித்துள்ள மு.க.இப்ரஹாமிற்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
‘தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோம்’- என்ற பாரதியின் எட்டயபுரம் மண் என்றால் அப்படித்தானோ..?!
–பழ.அசோக்குமார்