கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. சர்வதேச நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் தங்கள் தங்குமிடங்களுக்குள் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றனர்; நோய்த் தொற்று பரவியுள்ள பல்வேறு நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்துவருகின்றனர். எனினும், பிரேஸில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, கொரானா என்பதே வதந்தி என்றும், அது `சிறிய காய்ச்சல் மட்டுமே’ என்றும் கூறி, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரேஸில் நாட்டில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்டோர், கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு மாகாணங்களின் ஆளுநர்கள், தங்களது பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோதும், அதிபர் போல்சொனாரோ தென்னமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தையான பிரேஸிலை முடக்க முடியாது என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரேஸில் மாகாணங்களின் ஆளுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் போல்சொனாரோ, “மன்னித்து விடுங்கள்; சிலர் இறக்கப்போகிறார்கள். அதுதான் வாழ்க்கை. சாலை விபத்துகளைக் காரணம் காட்டி, கார் தொழிற்சாலைகளை மூடிவிட முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!” என்று அதிர்ச்சியளித்தார் போல்சொனாரோ.

சிட்டி ஆஃப் காட்

Also Read: `ஆம்புலன்ஸ் சைரன் ஒலி கேட்டு கண் விழிக்கிறேன்..!’ – இத்தாலியில் ஒருநாள் #MyVikatan

பிரேஸில் அதிபரின் கருத்துகள் இவ்வாறு இருக்க, அந்நாட்டின் தலைநகர் ரியோவில் ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளனர், ரியோவின் போதைப்பொருள் மாஃபியாவைச் சேர்ந்தவர்கள். சிட்டி ஆஃப் காட் (City of God) என்றழைக்கப்படும், ரியோ நகரத்தின் எளிய மக்கள் வாழும் மிகப்பெரிய பகுதி, கடந்த ஆண்டுகளில் போதைப்பொருள் மாஃபியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது. ரியோ நகரத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில், மூன்றில் ஒருவர் சிட்டி ஆஃப் காட் பகுதியைச் சேர்ந்தவர். சிட்டி ஆஃப் காட் மாஃபியா குறித்து, அதே பெயரில் வெளிவந்த திரைப்படம் ஒன்று உலக சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமானது.

மாஃபியா அறிவித்த ஊரடங்கு உத்தரவை ரியோ மக்கள் பயபக்தியோடு பின்பற்றி வருகின்றனர் என்பது அரசுக்கே ஆச்சர்யமூட்டுவதாக அமைந்துள்ளது. “அரசு அமைதியாக இருப்பதாலும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாலும், மாஃபியா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார், ரியோவைச் சேர்ந்த ஒருவர். சிட்டி ஆஃப் காட் பகுதியில் பெரிய ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு, வெளியில் சுற்றித்திரிபவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும் என்றும், மாஃபியா கண்காணிப்பதாகவும் கூறுகின்றனர்.

கொரோனாவைக் குறிக்கும் கிறிஸ்ட் ரிடீமர் சிலையின் மாதிரி

வீடுவீடாகச் சென்ற சிட்டி ஆஃப் காட் பகுதியின் கேங்க்ஸ்டர்கள், “கொரோனா குறித்து பலரும் அலட்சியமாகச் செயல்படுவதால், நாங்கள் ஊரடங்கை அமல்படுத்துகிறோம். வீட்டை விட்டு வெளியேறினால், தண்டனை கிடைக்கும்; அதனால் வீட்டினுள் இருங்கள்!” என்று அறிவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மொர்ரொ டாஸ் ப்ராஸரெஸ் என்ற பகுதியில், தெருக்களில் மக்கள் இரண்டு இரண்டு பேர்களாக மட்டும் நடமாடுவதற்கு அனுமதியளித்துள்ளனர். எனினும், சிட்டி ஆஃப் காட் போன்ற மற்றொரு மிகப்பெரிய பகுதியான ரோசின்ஹாவின் கேங்க்ஸ்டர்களால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரியோவின் மிகப்பெரிய சுற்றுலாப் பகுதியான கிறிஸ்து ரிடீமர் சிலையின் அருகில் இருக்கிறது, சாண்டா மார்லா என்ற பகுதி. பிரேஸிலின் விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியின் நுழைவு வாயிலில், கேங்க்ஸ்டர்கள் சோப் அளிப்பதோடு, கைகளைக் கழுவ தண்ணீரும் வைத்துள்ளனர். “சாண்டா மார்லாவுக்குள் நுழைவதற்கு முன், கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்” என்ற அறிவிப்புப் பலகையையும் வைத்துள்ளனர் மாஃபியாவைச் சேர்ந்தவர்கள்.

பிரதமர் மோடியுடன் போல்சொனாரோ

Also Read: சென்னையில் 9 இடங்களுக்குக் கொரோனா அலர்ட்.. கண்காணிப்பு வளையத்தில் 1½ லட்சம் வீடுகள்!

பிரேஸிலின் கேங்க்ஸ்டர்கள், மாஃபியா ஆகியோர் மக்களைக் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றிவரும் சூழலில், பிரேஸில் அதிபர் போல்சொனாரோ, ட்விட்டரில் மக்களுடன் உரையாடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். கொரொனா தொற்று ஏற்படாமல் இருக்க பரிந்துரைக்கப்படும் சமூக விலகலை எதிர்க்கும் போல்சொனாரோ, ரியோவின் தெருக்களில் மக்களோடு மக்களாக நடப்பதும், உரையாடுவதுமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. “65 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளில் இருங்கள்; மற்றவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புங்கள். இல்லையெனில், வேலையின்மை அதிகரிக்கும். பிரேஸில், வெனிசூலா போன்று மாறிவிடும். கொரோனா வைரஸை யதார்த்தத்தோடு மோத வேண்டும். இதுதான் வாழ்க்கை; எப்படியும் ஒரு நாள் மரணிக்கப்போகிறோம்” என்று கூறியுள்ளார் போல்சொனாரோ. அவர் பதிவுசெய்த வீடியோக்களை கொரோனாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவதாகக் கூறி நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

பிரேஸில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ தீவிர வலதுசாரி கருத்தியல் கொண்டவராகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர். கடந்த காலங்களிலும், பல்வேறு விவகாரங்களிலும் போல்சொனாரோ கூறிய கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தின. கடந்த குடியரசு தின விழாவில், இந்தியாவின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றவரும் இவரே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.