‘Based On A True Story’ எனத் துவங்கும் சினிமாக்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு உண்டு. அதே சமயம் நிஜங்களை சினிமாவாக்கும் இயக்குநர்களுக்கு அதன் உண்மைத் தன்மை மாறாமல் அப்படியே சினிமாவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அதிகம். ஆனால் எத்தனை பேர் அதைச் சரியாகச் செய்தார்கள் என்பது சந்தேகம் தான். சர்வதேச அளவில் உண்மையிலிருந்து பிறந்த சில சினிமாக்களையும் அதன் பின்னணியையும் காண்போம். 

Kill The Messenger.

நிகராகுவாவில் 1980 முதல் 1990-கள் வரை நடந்த உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு அமெரிக்கா பெரிதும் ஆயுத உதவி செய்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, நிகராகுவாவில் நடக்கும் காண்ட்ரா கிளர்ச்சிக்கு உதவுவது தடை செய்யப்பட்டது. ஆனாலும் நிகராகுவாவிடம் இருந்து கடத்தப்படும் கொக்கைன் போதைப் பொருளை உள்நாட்டுக்குள் அனுமதித்தது, ஆப்ரிக்க அமெரிக்கர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி பணம் திரட்ட அக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியது எனப் பல குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது உண்டு.  

image

இதனை 90-களின் மத்தியில் அமெரிக்கப் பத்திரிக்கையொன்றின் நிருபர் ’காரி வெப்’ புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வந்தார். ஆனால் இது அரசுக்கு எதிரான போலியான குற்றச்சாட்டு என மூடி மறைக்கப்பட்டது. மனமுடைந்த ‘காரி வெப்’ தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அவர் தனது புலனாய்வை அடிப்படையாகக் கொண்டு ’Dark Alliance’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சினிமா தான் 2014-ல் வெளிவந்த ‘Kill The Messenger’ என்ற திரைப்படம்.

Aftershock 

ஜூலை-27, 1976, சீனாவின் டாங்சன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை சீற்றமாக அறியப்படுகிறது. இருபத்தி மூன்றே நொடிகளில் இயற்கை சுமார் 2,50,000 மனித உயிர்களை வேட்டையாடி ஓய்ந்தது. ஆனால் பலி எண்ணிக்கை 6,55,000 என்கிறது ஓர் அறிக்கை. அதன் நினைவாக சீன அரசு உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பியது. 12,000 சதுர அடி பரப்பளவுள்ள நினைவிடம் உருவாக்கி அதில் 1976 பேரழிவின் போது எடுக்கப்பட்ட 400 புகைப்படங்கள் மற்றும் 600 கட்டுரைகளைக் காட்சிக்கு வைத்துள்ளது. Ling Zhang என்ற நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட திரைப்படமான Aftershock , ’டாங்சன்’ நிலநடுக்கத்தை மீண்டும் நம்முன் திரையில்  நிகழ்த்திக் காட்டுகிறது. 

image

42  

1919’ல் ஜோர்ஜியாவில் பிறந்து கலிபோர்னியாவில் வளர்ந்த ‘ஜாக்கி ராபின்சன்’ அமெரிக்காவின் மேஜர் லீக் பேஸ்பால் சங்கத்தில் சேர்ந்து விளையாடிய முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர் ஆவார். 1947’ல் தனது விளையாட்டு வாழ்வை துவங்கிய அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அத்துறையில் கோலோச்சினார். அதுவரை பேஸ்பால் ஆட்டத்திலிருந்த நிறவெறி தழும்புகளைத் தனது வியர்வையால் அழித்தார் அவர்.  1972’ல் I Never Had It Made என்ற தனது சுயசரிதையினை எழுதினார் ஜாக்கி ராபின்சன். 

அமெரிக்கர்களின் பிரிய விளையாட்டான பேஸ்பால் ஆட்டத்தில் 1947 வரை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட சேர்க்கப்பட்டிருக்கவில்லை. மைதானத்தில் விளையாடும் போது எதிர் அணியினரால் “ஏய் நீக்ரோ, ஏய் நீக்ரோ” எனப் பகிரங்கமாகவே ’ஜாக்கி ராபின்சன்’ சீண்டப்பட்டார், சக வீரர்கள் அவரை மதிக்கவில்லை. மைதானத்தில் சாகசங்கள் செய்தாலும் பார்வையாளர்கள் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அவரது இலக்கு தன்னை சீண்டுபவர்களுக்குத் தற்காலிகமாக பதில் சொல்வது அல்ல. ஒடுக்கப்படும் தங்கள் கறுப்பின மக்களுக்கு நிரந்தர வெற்றி வாசலைத் திறக்கும் சாவி அவரிடம் இருந்தது. அந்த பெரும் பொறுப்பு அவரை பொறுமையாக இருக்கச் செய்தது. 

image

அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு கழகத்தின் முக்கிய பொறுப்புகளிலிருந்தவர் ‘ஜாக்கி ராபின்சன்’. அவர் அணிந்து விளையாடிய சீருடை எண் ’42’ இதனை இன்றும் அமெரிக்க பேஸ்பால் வீரர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவர் நினைவாக அணிவார்கள். நீக்ரோ லீக்ஸ், மைனர் லீக்ஸ், மேஜர் லீக்ஸ் என படிப்படியாக உயரம் தொட்டவர் ‘ஜாக்கி ராபின்சன்’. அமெரிக்காவில் அவருக்கு நினைவிடங்கள், அவர் பெயரால் விளையாட்டு கழகங்கள் உண்டு. அமெரிக்கச் சமூக உரிமை இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்ட இவர் (UCLA) எனப்படும் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இணைத்து கால்பந்து, கூடைப்பந்து, ஓட்டம் ஆகிய விளையாட்டுகளிலும் தனது பங்களிப்பை வழங்கினார். 

இயக்குநர் ‘பிரையின் ஹெல்ஜிலாண்ட்’ ‘ஜாக்கி ராபின்ச’னின் வாழ்க்கையினை அவர் அணிந்து விளையாடிய சீருடை எண் ‘42’ என்ற பெயரில் 2013’ல் சினிமாவாக இயக்கினார். அமெரிக்க பேஸ்பால் விளையாட்டில் கறுப்பின மக்களுக்கான முதல் வெற்றிப் பந்தை உயரே அடித்த ’ஜாக்கி ராபின்சன்’ தனது 53’வது வயதில் நீரிழிவு நோயால் காலமானார். 

‘பியர்பாயிண்ட் : தி லாஸ்ட் ஹாங் மேன்

பியர்பாயிண்ட் : தி லாஸ்ட் ஹாங் மேன்’ என்ற ஆங்கிலத் திரைப்படம் அரச கைதிகளைத் தூக்கிலிடுவதை தொழிலாக செய்த ‘ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’ என்ற மனிதனின் வாழ்க்கையைப் பேசுகிறது. 1905-ஆம் வருடம் இங்கிலாந்தில் பிறந்தவர் ‘ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’. இங்கிலாந்து நடானது சிறையிலிருந்த கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற இவர் போன்றவர்களைப் பயன்படுத்தியது.  ‘ஆல்பர்ட் பியர் பாயிண்ட்’ன் தந்தையும் இதையே தனது பணியாகச் செய்தவர்.  சில நொடிகளிலேயே ஒருவரை  தூக்கிலிடுவதில் வல்லவர் என்ற பெயரைப் பெறுகிறார் ‘ஆல்பர்ட் பியர்பாயிண்ட்’. அவர் 7.5 நொடிகளில் ஒரு உயிரைத் தூக்கிலிட்டுக் கொன்றதன் மூலம் மேல் அதிகாரிகளிடம் கவனம் பெறுகிறார். 

image

இது பற்றி நாஜிகளின் ஜெர்மனிக்குத் தெரியவர ‘ஆல்பர்ட்’ இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகிறார். அங்கு 47 கைதிகளை தூக்கிலிடும் வேலை அவனுக்கு தரப்படுகிறது. அதற்கு அதிக பட்சமாக ஒருவாரம் மட்டுமே கால அவகாசம். ஒரு நாளைக்கு 13 பேர் வீதம் கைதிகளைக் கொன்றுவிட்டு இங்கிலாந்து திரும்புகிறார் ஆல்பர்ட் பியர் பாயிண்ட். 1933 முதல் 1955 வரையிலான காலகட்டத்துக்குள் ‘ஹாங்மேன்’ ‘ஆல்பர்ட் பியர்பாயிண்ட்’ 608 பேரின் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார். அவர் தனது வேலையை ராஜினாமா செய்தபிறகு எழுதிய அனுபவக் குறிப்பில் “நான் சொல்கிறேன் எனது அனுபவத்தில் தூக்குத்தண்டனை பழிவாங்கும் உணர்ச்சியைத் தான் மனிதர்களிடத்தில் வளர்த்ததே தவிர அதனால் எந்த நன்மையும் இல்லை” ‘ஆல்பர்ட் பியர்பாயிண்ட்’ எனும் பரிதாபத்துக்குரிய மனிதனை அவனது 87’வது வயதில் இயற்கை அழைத்துக் கொண்டது.

பியர் பாயிண்ட்டின் வாழ்க்கையை இயக்குநர் எடிரியன் செர்கோல்டு The last Hang Man என்ற பெயரில் சினிமாவாக்கினார். 2005’ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் 2007 BAFTA திரைப்படவிழா, டினார்ட் பிரிட்டீஸ் பிலிம் பெஸ்டிவல் 2006, லண்டன் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் பிலிம் விருது உள்ளிட்ட பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் ‘சில்வர் ஹிட்ச்காக்’ விருதையும் இப்படம் வென்றது. இத்திரைப்படத்தை தழுவி தமிழில் “பொறம்போக்கு என்ற பொதுவுடைமை” என்ற சினிமா உருவாக்கப்பட்டது. அரச கொலைகளுக்கு தண்டனை என்று பெயர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.