தன் அப்பாவும் அம்மாவும் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் இப்போது தான் ஜெயலலிதா படத்திற்கு நடனம் அமைத்து வருகிறேன் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராமிற்குப் பல அடையாளங்கள் உண்டு. ஆரம்பத்தில் நடிகை. அப்புறம் நடன இயக்குநர். அதன் பிறகு அரசியல்வாதி. இப்போது சமூக ஊடகத்தில் மிகத் தீவிரமாகச் செயல்படும் செயல்பாட்டாளர். இதனிடையே மறுபடியும் தனது நடன இயக்குநர் பணிக்குத் திரும்பியுள்ளார் காயத்ரி. ஏல்.எல். விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் முன்னாள் முதல்வரும் மூத்த திரைப்பட நடிகையுமாகிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் பயோபிக் ஆகும். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் காயத்ரி ரகுராம் இப்படத்திற்காக கங்கனாவை வைத்து ஒரு பரதநாட்டிய நடனத்தை வடிவமைத்திருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுவயதில் ஒரு பரத கலைஞராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர். அதை எடுத்துக் காட்டும் காலகட்டத்திற்கான காட்சியாக இந்த நடனம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து காயத்ரி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வுக்கு பேசியுள்ளார். அதில், “அம்மா (ஜெயலலிதா) ஒரு நல்ல கிளாசிக்கல் நடனக் கலைஞர் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே, இந்த நடனத்தின் மூலம் அதை அப்படியே கொண்டுவர முயற்சிக்கிறோம். இது படத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் வரும் காட்சி” எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன் தயாரிப்பாக கங்கனா ரனாவத், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு காயத்ரியிடம் முறையாக பாரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். அது பற்றி “கங்கனா இந்த நடனத்தை முதன்முறையாகச் செய்கிறார். நான் அவருக்குப் பரத நாட்டியத்திற்கான அடிப்படை முறைகள் குறித்து பயிற்சி அளித்தேன். அவர் இதை ரசித்து கற்றார்” என விளக்கம் அளித்துள்ளார் காயத்ரி.
இது ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால், ஜெயலலிதா இடம்பெற்ற பழைய கிளாசிக்கல் நடனங்களை காயத்ரி அப்படியே பிரதிபலித்தாரா? எனக் கேட்டதற்கு அவர், “இந்தப் பாடல், ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாகக் கொண்டது. அதற்கான நடன அசைவுகள் என்னால் அப்படியே உருவாக்கப்பட்டுள்ளன. நான் என்ன சொல்கிறேன் என்றால், இது ஒரு நிஜமான பாடல். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அவர் இசையில் மதராசபட்டினம் படத்தில் வெளியான ‘பூக்கள் பூக்கும்’ பாடலுக்கு நான் நடனம் அமைத்தேன்”என்கிறார்.
‘தலைவி’ திரைப்படம் தனது சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக இருக்கும்” என்று காயத்ரி கூறியுள்ளார். “என் அம்மாவும் அப்பாவும் அம்மா (ஜெயலலிதா) மற்றும் எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்தனர். அவர்கள் தங்கப்பன் மாஸ்டருக்கு உதவி நடன இயக்குநர்களாக இருந்தனர். அம்மாவின் (ஜெயலலிதா) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் காயத்ரி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM