கொரோனா என்ற ஒரு வார்த்தை, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அரியலூரில் கொரனோ தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர், பெட்டில் படுத்துக்கொண்டு டிக்டாக் வீடியோ போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தனிமைக் குற்ற உணர்வுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் குடும்பத்தினர்.

கொரோனா வைரஸ்

கடந்த ஆண்டு இறுதியில், சீனாவின் வுஹான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், அரியலூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 18-ம் தேதி, காய்ச்சல் அறிகுறியுடன் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் அப்பெண், அவரது சோகம் மறைய டிக் டாக்கில் நான்கு வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு மருத்துவ உதவிகள் புரிந்த ஒப்பந்த மருத்துவ தூய்மைப் பணியாளர்கள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியதால், அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்ட டிக் டாக் வீடியோ உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது.

என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட பெண்ணிம் குடும்பத்தாரிடம் பேசினோம். ”தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்ற வருத்தம் அவளுக்கு இருந்திருக்கிறது. அவளால் எங்களது குடும்பத்தை தனிமைபடுத்தி வைத்திருக்கிறார்கள். தன்னால்தானே தனது குடும்பத்தாருக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்று மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். நாள் முழுவதும் தனிமையில் இருப்பதால் வேறு வழியில்லாமல், வேதனையைப் போக்க டிக்டாக் வீடியோ பதிவிட்டுள்ளார். சோகமாய்ப் பாடி, தனது மனதை அமைதிப்படுத்தியிருக்கிறார்” என்று முடித்துக்கொண்டார்கள்.

டிக் டாக்

அதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் ராமமூர்த்தி என்பவர், ”டிக்டாக் போன்ற சமூக வளைதளங்களால் கலாசார சீரழிவு நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு செல்போன் கொடுக்கலாமா… அது தவறு இல்லையா, அதன் மூலமாக பரவாதா? கொரோனா பாதிக்கப்பட்டவர் டிக் டாக்கில் வீடியோ எடுத்து பாடிக்கொண்டிருக்கிறார். அதைத் தடுக்காமல் மூன்று அதிகாரிகள் சும்மா இருந்திருக்கிறார்கள். அதோடு, அவர்களுடைய செல்போனையையும் பயன்படுத்தியிருக்கிறார். கொரனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பொருளைத் தொட்டாலும் வைரஸ் அதன் மூலமாக பரவும் என்பது ஊழியர்களுக்குத் தெரியாதா? அரசு ஊழியர்களே கொரோனா பாதிப்பு தெரியாமல் அலட்சியமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற அலட்சியம் நடக்காமல் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.