டெல்லி மேற்கு நிஜாமுதீனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத் (Tablighi Jamaat) தற்போது இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. காரணம் கொரோனா. ஆம். கடந்த 13 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை ஜமாத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்களில் 16 நாடுகளைச் சேர்ந்த 300 வெளிநாட்டவர்களும் அடக்கம்.

நிஜாமுதீன்

கொரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக டெல்லி நிஜாமுதீனிலிருந்து வெளிவரும் தகவல்கள் அனைத்தும் மொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளன.

மூன்று நாள்கள் ஜமாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து பலர் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழகம், அஸ்ஸாம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மக்கள் பெரிய அளவில் கூடியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் விமானம், ரயில் பேருந்து எனப் பல போக்குவரத்துகள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுள்ளனர். பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட, நாடு முழுவதும் கொரோனா குறித்த அச்சம் பரவியது.

நிஜாமுதீன்

தெலங்கானாவில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 6 பேர் கொரோனாவால் பலியாகினர். மேலும் மகாராஷ்டிரா, தமிழகம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் இந்த நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மலேசியா… டெல்லி…. ஒரு டைம்லைன்!

பிப்ரவரி: டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னதாக மலேசியாவில் பிப்ரவரி மாதம் இதே அமைப்பின் பிரமாண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16,000 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

நிஜாமுதீன்

டெல்லி நிஜாமுதீனில் நிகழ்ச்சி தொடங்கிய மார்ச் 13 முதல் என்ன நடந்தது என்பதனைப் பார்க்கலாம்….

மார்ச் 13: நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட, டெல்லி ஜமாத்தில் கூட்டம் தொடங்கியது. எனினும் இதேநாளில்தான் டெல்லி சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் `கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும் 200 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களும் மாநாடுகளுக்கும் அனுமதி கிடையாது’ என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 13 -ம் தேதி வந்த நிலையில் 14 மற்றும் 15 -ம் தேதிகளில் கூட்டம் நடந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டும் கூட்டம் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read: `டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்’ ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

மார்ச் 15: நிகழ்ச்சி முடிந்து சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். மேலும் சில வெளிநாட்டினர் உட்பட பலர் ஜமாத்தில் தங்கி இருந்ததாக வட மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா

மார்ச் 16: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்படி, 50 நபர்களுக்கு மேல் கூடும் மத, சமூக, அரசியல் உள்ளிட்ட எந்தக் கூட்டமும் நடத்தக் கூடாது எனவும் இந்தத் தடை உத்தரவு மார்ச் 31 -வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் நிஜாமுதீனில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 20: டெல்லிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இது கண்டுபிடிக்கப்பட்டது தெலங்கானாவில். இடையில் பயணத்தின்போதும், தெலங்கானாவில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைகள் மேற்கொண்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மோடி மன்னிப்பு

மார்ச் 22: நாடு முழுவதும் பிரதமரின் அறிவிப்பை ஏற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அன்று நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியது.

மார்ச் 23 : ஜனதா ஊரடங்குக்கு அடுத்த நாள், ஜமாத்தில் தங்கியிருந்த 1,500 மக்கள், அங்கிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள்.

மார்ச் 24: பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணங்கள் அனுமதிக்கப்பட்டன.

மார்ச் 25: லாக் டவுன் உத்தரவால் ஜமாத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்களால் வெளியேற முடியாத சூழல்.. ஜமாத் நிர்வாகிகள் அங்கு தங்கி இருக்கும் மக்களை வெளியேற்ற மனு அளித்தனர். சில வாகனங்களின் தகவல்களை வழங்கி அனுமதி கேட்டது ஜமாத்.

நிஜாமுதீன்

மார்ச் 26: கூட்டத்தில் கலந்து கொண்ட போதகர் ஒருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் உறுதி செய்யப்பட்ட அதே நாளில் அவர் மரணமடைந்தார்,

மார்ச் 27: கொரோனா அறிகுறியுடன் ஜமாத்தில் இருந்த 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மார்ச் 28: உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழு ஜமாத்தில் ஆய்வு மேற்கொண்டது. பின்னர் அங்கு கொரோனா அறிகுறியுடன் இருந்த 33 பேரை டெல்லி ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர்.

மார்ச் 29: ஜமாத்தில் இருக்கும் அனைவரும் உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என லஜ்பத் நகர் காவல்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார். அதே தினம், இரவில் பேருந்துகள் மூலம் ஜமாத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கும், தனிமைப்படுத்தும் வார்டுக்கும் மாற்றப்பட்டனர். இறுதியாக வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகம் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஜாமுதீன் ஜமாத்

மார்ச் 30: ஜமாத் முழுவதையும் காவல்துறை தனது காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ட்ரோன் மூலம் ஜமாத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 31 (இன்று): ஜமாத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மீது வழக்கு பதிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலான வெளிநாட்டவர்கள் டூரிஸ்ட் விசாவில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரிய வந்தது. இதனால் அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Also Read: கொரோனா `ஹாட்ஸ்பாட்’ நிஜாமுதீன்.. 16 நாடுகள்..! -கறுப்புப்பட்டியலில் 300 வெளிநாட்டினர்? #Nizamuddin

நிஜாமுதீன் ஜமாத்

தற்போது ஜமாத்தில் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் சுமார் 200 பேருக்குக் கொரோனா அறிகுறி இருப்பதாகவும், பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு அளவில் தெரிய வரும் என்கின்றனர் அதிகாரிகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.