ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் மாத்திரைகள் வாங்கக் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவால் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடை, இறைச்சிக் கடை , மளிகைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது இல்லை. இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க மருந்தகங்களில் கடந்த ஒரு வாரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் நீண்ட வரிசையிலும், ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி விட்டு நாற்காலிகளில் அமர்ந்தும் மக்கள் மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது கூரியர் , லாரி போக்குவரத்து தடைப்பட்ட காரணத்தால் வெளியூர்களிலிருந்து மருந்துகள் வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு மருந்தக உரிமையாளரிடம் கேட்ட போது, “திண்டுக்கல் மொத்த வியாபாரிகள் அதிகமான மருந்துகளை திருச்சி, மதுரை, சென்னை, கோவை ஆகிய ஊர்களிலிருந்துதான் வாங்குவோம். மருந்துகள் அனைத்தும் கூரியர், லாரிகளில் வரும். வெளியூர்களிலிருந்து மருந்துகள் வந்தால் தான் மக்களுக்கு எங்களால் வழங்க முடியும்.33 சதவிகித மருந்துகள் தற்போது தடைப்பட்டு உள்ளன.
மக்களிடம் பரவலாக மே மாதம் வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோய்க்கு மாத்திரை வாங்குபவர்கள் எல்லோரும் ஒரு மாதம், இரண்டு மாதத்திற்குக் கொடுங்கள் என வாங்கி வைத்துக் கொள்கிறோம் என்று கேட்கிறார்கள். மருந்து தட்டுப்பட்டால் எல்லோருக்கும் மருந்து தர முடியவில்லை. எவ்வளவு மாத்திரை இருக்கிறதோ அவ்வளவு மாத்திரை கொடுக்கிறோம். இன்னும் ஒரு வாரத்திற்குத் தான் மாத்திரைகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மருந்து ஆய்வாளர் சுரேஷிடம் கேட்ட போது, “திண்டுக்கல்லைப் பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு இல்லை, இன்னும் ஒரு வாரத்திற்கு போதுமான மருந்துகள் உள்ளன. ஏற்கனவே மொத்த ஸ்டாக் பட்டியல் சென்னை அனுப்பி உள்ளோம். நாளை அந்தந்த கம்பெனிகளில் இருந்து மருந்துகள் திண்டுக்கல் வந்துவிடும்.
மேலும் திண்டுக்கல்லுக்குத் தேவையான மருந்துகள் மதுரையில் மொத்தமாகக் கிடைக்கிறது. அங்கு 40 சதவிகித மருந்துகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் தங்களது கடை உரிமத்தை வைத்துக் கொண்டு அவசரத்திற்கு அங்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM