திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தென்னரசு. இவர் தனக்குச் சொந்தமான 8,000 சதுர அடியில் உள்ள பெரிய வீட்டை `கொரோனா’ தடுப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள தற்காலிகமாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலரிடம் தன் வீட்டு சாவியை ஒப்படைத்துள்ளார். அந்த வீட்டை `கொரோனா’ பரிசோதனை மையமாகவோ, அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தும் முகாமாகவோ பயன்படுத்திக்கொள்ள தென்னரசு அனுமதி வழங்கியிருக்கிறார்.
இதற்காக தென்னரசு அந்த வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவரின் இந்த செயலை ஜோலார்பேட்டை மக்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். அவரது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட படுக்கைகளை அமைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் தன் பால் நிறுவனத்திலிருந்து தேவையான பால் பாக்கெட்டுகளை நாள்தோறும் காலை, மாலை கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகிறார்.
தென்னரசுவிடம் பேசினோம், “திருப்பத்தூர் மாவட்டத்தில், தனிமைப்படுத்தும் நபர்களைத் தங்க வைப்பதற்கான முகாம்களுக்கு போதிய இட வசதியில்லை என்று கேள்விப்பட்டேன். பெருந்தொற்று நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசுக்கு நானும் உதவியாக இருக்க நினைக்கிறேன்.

நான் வழங்கிய வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகள் வேறு ஏதேனும் உதவிகளைக் கேட்டாலும் செய்து கொடுக்கத் தயாராக உள்ளேன். உணவு கிடைக்காத எளிய மக்களும் என்னை எந்த நேரத்திலும் அணுகலாம். உதவி செய்ய காத்திருக்கிறேன்’’ என்றார் மனித நேயத்துடன்.