திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மை நீர் நிலை ஆதாரமாக ஒரு காலத்தில் விளங்கிய கூவம் ஆறு, இன்று மணல் கொள்ளையர்களின் பிடியில் சிக்கி அவல நிலைக்குள்ளாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் இருந்து தொடங்கும் கூவம் ஆறு பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம், அதிக்கத்துர், மணவாள நகர் வழியே பயணித்து ஆவடி, பருத்திப்பட்டு, திருவேற்காடு வழியே சென்று சென்னையின் பல பகுதிகளைக் கடந்து கடலில் கலக்கிறது.

கூவம் ஆறு

சென்னை மக்களின் பார்வைக்கு சாக்கடை ஓடையாகத் தெரியும் கூவம் ஆற்றின் முக்கியத்துவம் திருவள்ளூர் பகுதி மக்களுக்குதான் தெரியும். அந்த ஆற்றை ஆதாரமாகக் கொண்டு தான் ஒருகாலத்தில் விவசாயம் நடைபெற்று வந்தது. காலப்போக்கில் மழைப் பொழிவு அளவு குறைந்ததும் மணல் கொள்ளை அமோகமாக நடந்ததும்தான் அந்த ஆறு, இந்த நிலைக்கு வருவதற்குக் காரணம் என்கின்றனர் திருவள்ளூர் பகுதி வாழ் மக்கள். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம் மற்றும் அதிகத்தூர் கிராமங்களில் கூவம் ஆற்றங்கரைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடைபெற்றுவருவதாக நமக்குத் தகவல் வந்தது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு நேரில் சென்றோம்.

திருவள்ளூர் ரயில் நிலைத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்த கூவம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. அதேபோல் பல வருடங்களாக நடைபெற்று வரும் மணல் கொள்ளை காரணமாக ஆறு தரை மட்டத்திலிருந்து பல அடிகள் தோண்டப்பட்டுள்ளதால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. நாங்கள் அந்த ஆற்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது தூரத்தில் சிலர் மூட்டைகளில் மணலை வாரி நிரப்பிக்கொண்டிருந்தனர். நாங்கள் பார்ப்பதைப் பார்த்த அவர்கள் அந்த இடத்திலிருந்து நிரப்பிய வரை மட்டும் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனங்களில் அந்த இடத்திலிருந்து நகர்ந்தனர்.

கூவம் ஆறு

Also Read: 144 தடை உத்தரவு… என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? சில கேள்விகளும் விடைகளும்! #FAQ

பின் அந்த ஆற்றங்கரையில் நாங்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் இறங்கி வந்து எங்களிடம் விசாரித்தார். விஷயத்தைச் சொல்லிவிட்டு அவரிடமே அங்கு நடைபெறும் மணல் கொள்ளை குறித்துக் கேட்டோம். தன்னை அதிகத்தூர் கிராமத்தின் முன்னாள் தலைவர் எனக்கூறி அறிமுகப்படுத்தி கொண்டு தொடர்ந்து பேசினார்,

“சார், கடந்த 30 வருஷமா இந்த ஆத்துல மணல் அள்ளிட்டு இருக்காங்க. ஆரம்பத்துல ஊர்மக்கள் அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு மணல் அள்ளிட்டுப் போனாங்க. ஆனா அதுக்கு அப்புறமா சிலர் வியாபாரத்துக்காக மணல் அள்ள ஆரம்பிச்சாங்க. அப்போ ஆத்துல மணல் எடுக்கறதுக்கு கவர்மென்ட் டெண்டரும் இருந்துச்சு. அந்த நேரத்துல அதிகளவுல மணல் எடுக்கறது நடந்துச்சு. அதுக்கு அப்பறம் அரசாங்கமே மணல் எடுக்கறதுக்கு டெண்டர் விடறத நிறுத்தி ஆற்றுப் பகுதியில மணல் எடுக்கக் கூடாதுனு சட்டம் கொண்டு வந்துச்சு. ஆனால், இப்ப வரைக்கும் இந்த ஆத்துல மணல் கொள்ளை நடந்துட்டுதான் இருக்கு. உள்ளூர் அரசியல்வாதிங்களோட ஆதரவோடு காவல்துறை ஒத்துழைப்போட நடந்துட்டு இருந்துச்சு.

ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் இரவு நேரத்துல காவல்துறையோட ஒத்துழைப்போட பொக்லைன் இயந்திரம் வெச்சு லாரில அள்ளிட்டுப் போய்ட்டிருந்தாங்க. ஆனால், இப்ப அரசாங்கம் மணல் கொள்ளையத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துட்டு வர்றதால பயந்துட்டு லாரில எடுக்கறதில்ல. ஆனால், அதுக்குப் பதிலா மாட்டு வண்டிலயும் டூ வீலருலயும் எடுத்துட்டுப் போறாங்க. பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம், அதிகத்தூர் இந்த மூணு இடத்துலதான் ஆத்து மணல் நல்ல தரமா இருக்கும். அள்ளிட்டுப் போய் வித்தா நல்ல காசு கிடைக்கும். அதனாலதான் குறிப்பா இந்த இடத்துல வந்து அள்ளிட்டுப போறாங்க. இந்த மூணு ஊர்ல கூவம் ஆத்து மணல எங்க எடுத்தாலும் ஒரு யூனிட் ரூ.12,000-க்கும் குறையாமப் போகும்.

கூவம் ஆறு

Also Read: “நாங்கள்லாம் அப்பவே இப்படித்தான்!” – தன் வரலாறு கூறும் கூவம் #VikatanOriginals

இந்த மணல் கொள்ளைல ஊர் இளைஞர்களையும் ஆசை காட்டி ஈடுபடுத்துறாங்க. ஒரு யூனிட் மணல் அள்ளிக்கொண்டு போய் கொடுத்தா அந்தப் பசங்களுக்கு ஆயிரத்துல இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வர கொடுக்குறாங்க அதால அந்தப் பசங்களும் ராத்திரி ஆனா போதும் மணல் அள்ள வந்துடுவானுங்க. மணல் அள்ள வர பசங்க எல்லாருமே 20-22 வயசு பசங்கதான்; இருசக்கர வாகனத்துலதான் எடுத்துட்டுப் போறானுங்க. ராத்திரி நேரத்துல எடுக்கறதால அவனுங்கள போய் கேக்கறதுக்கும் பயமாதான் இருக்கும். அதனாலயே மக்கள் யாரும் போய் கேக்கறதில்ல. நான் இதைப்பத்தி பழைய கடம்பத்தூர் தாசில்தார்கிட்ட புகார் கொடுத்தேன். ஆனால், எந்தவித நடவடிக்கையுமே அரசாங்கம் எடுக்கல. இப்போ பகல் நேரத்துலையே வந்து அள்ளுறானுங்க. இதுக்கு ஒரு நல்ல வழி எப்போ பிறக்கப் போகுதுனு தெரியல” என்று புலம்பியபடியே அந்த இடத்தில இருந்து நகர்ந்தார்.

அவரிடம் பேசிவிட்டு ஆற்றின் மறுபக்கக் கரைக்கு ஏறினோம் அங்குதான் நாங்கள் இன்னும் ஓர் அதிர்ச்சியான காட்சியைப் பார்த்தோம். கூவம் ஆற்றங்கரைக்கு அருகிலேயே அதிகத்தூர் கிராமத்தின் இடுகாடு இருக்கிறது. அந்த இடுகாட்டில் கூட சிலர் பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைகளுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டி மணல் எடுத்துள்ளதைக் காண முடிந்தது.

கூவம் ஆறு

கூவம் ஆற்றங்கரையில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை குறித்து கடம்பத்தூர் வட்டாச்சியர் விஜயகுமாரியைத் தொடர்பு கொண்டு பேசினோம்,

“நான் கடம்பத்தூர் பகுதிக்குத் தாசில்தாராக வந்து சில மாத காலங்களே ஆகின்றன. ஏற்கெனவே ஒரு முறை என்னிடம் பிஞ்சிவாக்கம் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக ஒரு புகார் வந்தது. உடனே, அந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினேன். அதில் அந்தப் பகுதியில் செக் டேம் கட்டுவதற்காகதான் மணல் அள்ளப்படுவதாகத் தெரிந்தது. ஆனால், அதன்பின் கூவம் ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக எந்தப் புகாரும் எனக்கு வரவில்லை. இப்போது உங்கள் மூலமாகதான் மீண்டும் தெரியவந்திருக்கிறது. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்கிறேன்” என்றார்.

அந்த ஆற்றங்கரையோரம் மணல் அள்ளப்படுவதால் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் வீடுகள் மழைக் காலங்களில் வெள்ளம் வந்தால் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாயமும் அங்கு உள்ளது. சுடுகாட்டு மணலைத் திருடி விற்று பணமாக்க துடிக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.