`’நாங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இருக்கும் சிறப்பு அதிகாரிகள். நீங்கள் கள்ளத்தனமாக மது விற்பதாக எங்களுக்கு புகார் வந்திருக்கு’ என்று நான்கு நபர்கள், டிப்டாப்பாக உடையணிந்து வந்து மிரட்டி, டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.20,000 ரொக்கத்தையும் 247 மதுப்பாட்டில்களையும் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டாஸ்மாக் கடை

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலக மக்களைத் தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது. அதன் வீரியத்தை உணர்ந்த இந்திய அரசும் அதைத் தேசிய தேசிய பேரிடராக அறிவித்ததோடு, 21 நாள் ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தியுள்ளது.

Also Read: `நீ சம்பாதிக்க என் வீட்டுப் பொருள்தான் கிடைச்சுச்சா?’ – காய்கறி வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்

தமிழக அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைத்து, ‘அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், உணவுப் பொருள்களை வாங்க மட்டுமல்ல, தேவையில்லாமல் மக்கள் பலர் வெளியே வருவது சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

சேப்ளாபட்டி

இதைத்தவிர, ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், பலரும் மதுப்பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால், குடிமகன்கள் பலர் தினமும் மதுப்பாட்டில்களைத் தேடி சாலைகளில் அலையும் கொடுமையும் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குளித்தலைப் பகுதியில் கள்ளத்தனமாக விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் பார் உரிமையாளரிடம் நான்கு மர்ம நபர்கள், ‘நாங்க கொரோனா சிறப்பு அதிகாரிகள்’ என்று கப்ஸா விட்டு பணம் மற்றும் மதுப்பாட்டில்களை பறித்துச் சென்றிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் இருக்கிறது சேப்ளாபட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர், அருகில் உள்ள நெய்தலூர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூடியதால் குமரேசன் ஆயிரக்கணக்கான மதுப்பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த பனையூரைச் சேர்ந்த மணிகண்டன், கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த பாரத், புலிவலத்தைச் சேர்ந்த மணிகண்டன், காட்டூரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய நான்கு பேரும் டிப்டாப்பாக உடையணிந்துகொண்டு, மஹிந்திரா பொலீரோ மற்றும் குட்டியானை வாகனங்களில், குமரேசன் வீட்டிற்கு வந்துள்ளனர். ‘நாங்க கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள். அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி, நீங்கள் மதுபானங்களை விற்பதாக எங்களுக்கு தொடர் புகார் வந்திருக்கு. இதனால், உங்கள் வீட்டில் கூட்டத்தைக் கூட்டி, கொரோனா வைரஸை பரப்புவதாக சந்தேகிக்கிறோம்’ என்று கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்டு பதறிய குமரேசன், ‘பேசிக்கலாம் சார்…’ என்று கூறி, சில ஆயிரங்களை அவர்களின் கைகளில் அழுத்தியிருக்கிறார்.

குளித்தலை காவல் நிலையம்

ஆனால், கோபத்தின் உச்சிக்குப்போன அந்தப் போலி அதிகாரிகள், ‘எங்களை என்ன சோப்ளாங்கி அதிகாரிகள்னு நெனச்சியா?’ என்று எகிற, வீட்டில் இருந்தது, மனைவியிடம் வாங்கியது என்று ரூ.20,000 பணத்தைக் கொடுத்திருக்கிறார். அதோடு, ‘இவ்வளவுதான் நான் விற்க வச்சுருந்தது’ என்று 247 மதுப்பாட்டில்களையும் அவர்களிடம் குமரேசன் கொடுக்க, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட அந்தப் போலி அதிகாரிகள், ‘மன்னிச்சு விடுறோம். ஆனா, அடிக்கடி வருவோம்’ என்றபடி, தாங்கள் வந்த வாகனங்களில் கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போன பிறகுதான், தான் ஏமாந்ததை உணர்ந்த குமரேசன், உடனே அந்த நான்கு போலி அதிகாரிகள் பற்றி, குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, வாகனச் சோதனையில் மாட்டிய நான்கு பேரையும் குமரேசன் அடையாளம் சொல்ல, அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குமரேசன் மீதும் மதுபாட்டில்கள் பதுக்கல் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. போலி அதிகாரிகளால் டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம், குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.