மைக்கேல் ரெஜின் – கடந்த ஆண்டு சென்னை சிட்டி எஃப்.சி அணியோடு ஐ-லீக் கோப்பை வென்றவர், இப்போது ஐ.எஸ்.எல் சாம்பியன். சீஸனின் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டவர், கிடைத்த வாய்ப்பை மிகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முக்கியமான நாக் அவுட் சுற்றுகளின்போது ATK அணியின் தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். கோப்பை வென்ற ஹபாஸின் அணியின் நடுகளத்தில் அரணாக நின்ற ரெஜின், இந்தியாவின் கால்பந்துத் தலைநகரில் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள நிறையவே உழைக்க வேண்டியிருந்தது. காயத்திலிருந்து மீண்டு, அணியின் ஸ்டைலுக்காகத் தன் ஸ்டைலை மாற்றி, குறுகிய காலத்தில் பயிற்சியாளரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் ரெஜின். சென்னை சிட்டி டு ATK பயணம், தன் சகோதரரோடு விளையாடிய அனுபவம், ஐ.எஸ்.எல் வெற்றியைக் கொண்டாட முடியாத காரணம் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவரது பேட்டி…

போன வருஷம் ஐ-லீக் சாம்பியன், இந்த வருஷம் ஐ.எஸ்.எல் சாம்பியன்… எப்படி இருக்கு இந்த வெற்றி அனுபவம்?

ரொம்பவே சந்தோஷமா இருக்கு ப்ரோ, ரொம்ப ரொம்ப. தொடர்ந்து ரெண்டு வருஷம் ரெண்டு லீக் ஜெயிச்சிருக்கேன்றத நம்பவே முடியல. ரொம்ப வித்தியாசமான மனநிலைல இருக்கேன். ஆனா, இதைக் கொண்டாட முடியல. இப்போ இருக்க சூழ்நிலைல இரான்ல மாட்டிக்கிட்டிருக்கிற இந்திய மீனவர்களை நினைச்சு கஷ்டமா இருக்கு. அவங்க அப்படி இருக்கும்போது, அதே பின்னணியில இருந்து வந்த நான் அதை எப்படிக் கொண்டாடுறதுனு தெரியல. இன்ஸ்டா, ட்விட்டர்ல போஸ்ட் போடக்கூட மனசு இல்ல. ரொம்பவும் சந்தோஷம், ஆனா, அதை முழுமையா வெளிப்படுத்த முடியல. சங்கடமான சூழ்நிலைதான்.

Michael Regin

ஐ.எஸ்.எல், ATK, ஹபாஸ்… இவையெல்லாம் உங்களுக்கு என்ன கத்துக்கொடுத்திருக்கு.

நிறைய கத்துக்கிட்டேன். நிறையவே. அதையெல்லாம் எப்படி சுருக்கமா சொல்றதுனு தெரியல. சிட்டில இருந்தப்போ ஹபாஸ் கோச்கிட்ட நிறையவே கத்துக்கிட்டேன். ஆனா, இங்க ஹபாஸ் கோச்கிட்ட கத்துக்கே அதைவிட நிறைய விஷயங்கள் இருந்துச்சு. அவரோட அணுகுமுறை ரொம்பவே வித்யாசமா இருக்கும். ரொம்ப பெரிய லீக், பெரிய டீம், சீனியர் கோச்… இவங்ககிட்ட ஒரு வருஷம்தான் ஆகியிருக்கு. இன்னும் கத்துக்க நிறையவே இருக்குல்ல.

சீஸன் ஆரம்பத்திலேயே காயம். சில போட்டிகளில் சப்ஸ்டிட்யூட்டாக. கடைசியில் ரெகுலர் ஸ்டார்டர். எப்படித் தயாரானீங்க?

ஆமா, அது கஷ்டமான பீரியட். ஆரம்பத்துலயே காயம் ஆகிட்டதால அதிக போட்டிகள்ல விளையாட முடியாம போயிடுச்சு. நல்ல வேளையா சரியான நேரத்துல குணமாகிட்டேன். ஆனா, எப்படி ஃபைனல்ல ஸ்டார்டிங் லெவன்ல ஆடுற அளவுக்கு எல்லாம் மாறுச்சுனு தெரியல. என்னால நம்பவும் முடியல. பிராக்டீஸ் செஷன்ஸ்ல என்னோட செயல்பாடு கோச்சுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதனால ஆரம்பத்துல சில போட்டிகள்ள கடைசி 5 நிமிஷம் இறக்குனார். அப்பறம் ஒரு போட்டியில 10 நிமிஷம் ஆடவச்சார். கடைசியில் செமி ஃபைனல்ல ஸ்டார்டிங் லெவன்ல அறிவிச்சிட்டார். உண்மையா என்னால நம்பவே முடியல. போய் லைன் அப்ப ரெண்டு மூணு முறை செக் பண்ணேன். ஒருசிலர்கிட்ட கேட்கவும் செஞ்சேன். உண்மையா என்னால அப்போ அத நம்ப முடியல. சந்தோஷமா இருந்துச்சு. அந்த அளவுக்கு உழைச்சிருக்கோம்னு திருப்தியா இருந்துச்சு.

Michael Regin

ஹபாஸோட டீம்ல டிபன்ஸ் எப்பவுமே பலமா இருக்கும். டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர்கள் ரோல் ரொம்பவே முக்கியமானது. சென்னை சிட்டியில நீங்க ஆடின கேம் அது கிடையாது. அங்க பால் பொசஷன்ல வச்சிருப்பீங்க. அப்படியிருக்கையில, எப்படி இந்த செட் அப்க்கு நீங்க தயார் படுத்திக்கிட்டீங்க?

உண்மைதான். அது அவ்ளோ ஈசியா இல்ல. நான் ATK-ல ஆடுனது என்னோட கேமே இல்ல. அங்க நல்ல டிரிபிள் பண்றது, பாலை கன்ட்ரோல் பண்றதுனு என் ஸ்டைல்ல ஆடுவேன். ஆனா, இங்க அப்படி ஆட முடியல. ஆட முடியாது. என்னோட ரோல் என்ன அப்டின்றது கோச் ரொம்ப தெளிவா சொல்லிட்டாரு. `டிரிபிள் பண்ணவே பண்ணாத. சுத்தமா டிரிபிள் பண்ணாத. ஒரு மிஸ் பாஸ் ஆனாலும் கவுன்டர் அட்டாக் ஆகிடும். கோல் போயிடும். உங்க பொசிஷன்ல ஒரு சின்ன தப்புகூட நடந்திடக் கூடாது’னு சொன்னார். அதுக்கு செட் ஆக எனக்குக் கொஞ்சம் நேரம் எடுத்துக்குச்சு. ஒரு நாலஞ்சு மேட்ச் முன்னாடியா ஆடத் தொடங்கியிருந்தா இன்னும் நல்லா பண்ண முடிஞ்சிருக்கும்னு தோணுது.

உங்க தம்பிகூட (மைக்கேல் சூசைராஜ்) சேர்ந்து புரொஃபஷனலா விளையாடியிருக்கீங்க. ஆனா, இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து டைட்டில் ஜெயிச்சிருக்கீங்க. இந்த அனுபவம் எப்படி இருக்கு?

இது வேற லெவல் சந்தோஷம். எப்படிச் சொல்றதுனு தெரியல. என்னைவிட சூசைதான் ரொம்ப சந்தோஷமா இருக்கான். நான் போன வருஷம் டைட்டில் அடிச்சிட்டேன். அவனுக்கு இதுதான் முதல் டைட்டில். ரொம்ப முக்கியமான டைட்டில். சொல்ல முடியாத சந்தோஷத்துல இருக்கான். எங்க பிரதர் ஒருத்தன், சூசையோட ஃபேவரிட் அண்ணன் அவன், கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டான். அவனுக்கு டிராபி டெடிகேட் பண்ணனும்னு சூசை ரொம்ப ஆசையா இருந்தான். ஆனா, இந்தக் கொரோனா சூழ்நிலையில அது முடியல. ஆனா, ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.

உங்களோட ஃபேவரிட் ஃபுட்பால் பிளேயர் யார்? நீங்க எந்த டீமோட ஃபேன்?

கிறிஸ்டியானோ ரொனால்டோதான் எப்போமே. அவர் போற டீமுக்குதான் நம்ம சப்போர்ட்… யுனைடட், மாட்ரிட், யுவன்டஸ் எதுனாலும். சென்னை சிட்டில இருக்கும்போது செம ரவுசா இருக்கும். நான், சூசை, எட்வின்லாம் ஒரு பக்கம். டீம்ல மெஸ்ஸி ஃபேன்ஸும் கொஞ்சம் பேரு இருப்பாங்க. ஒரே சண்டையா இருக்கும். செம ஜாலியா இருக்கும் அதெல்லாம்.

போன வருஷம் நீங்களும் எட்வினும் டீம் மேட்ஸ். இந்த முறை ஃபைனல்ல நேருக்கு நேர் மோதுனீங்க. எப்படி இருந்துச்சு அந்தத் தருணம்?

ரெண்டு பேரும் ஐ.எஸ்.எல் ஃபைனல்ல வந்து நின்னது ரொம்ப பெருமையா இருந்துச்சு. எட்வினை நினைச்சு சந்தோஷமா இருந்துச்சு. அவ்ளோ ஷார்ட் டைம்ல சென்னையோட முக்கியமான பிளேயராயிட்டான். இப்போ இந்தியன் டீம் கால் அப் வந்திருக்கு. செம ஃபார்ம்ல இருக்கான். ஃபைனல்ல அவன Stamp பண்ணி எல்லோ கார்ட் வாங்குனேன். அதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

Michael Regin

சென்னை சிட்டில நிறைய தமிழ்ப் பசங்க. ஆனா, இப்போ அப்படி இல்ல. ரொம்ப வித்யாசமான சூழல். வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியன் பிளேயர்ஸ், பல நாடுகளைச் சேர்ந்த ஓவர்சீஸ் பிளேயர்ஸ்னு கலவையான டீம். எப்படி அந்த டிரஸ்ஸிங் ரூமுக்குள்ள செட் ஆனீங்க?

கஷ்டமாத்தான் இருந்துச்சு. இந்தி பேசுறது பயங்கர கஷ்டமா இருந்துச்சு. ஆனா, போகப் போக செட் ஆகிட்டேன். என்ன, இந்தி பேசுறது இன்னும் கஷ்டமாத்தான் இருக்கு. ராய் கிருஷ்ணா, அப்பறம் ஸ்பானிஷ் பிளேயர்ஸ் எல்லோருமே நல்லாவே பழகுறாங்க. டீமுக்குள்ள செட் ஆகிட்டே இருக்கேன்.

இன்னொரு நல்ல சீஸன் கொடுத்தா இந்தியன் டீம் கால் அப் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கா?

கண்டிப்பா. இப்பவே கேம்ப்புக்கான லிஸ்ட் கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்ணியிருந்தா எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கும்னு தோணுது. கோச் அறிவிச்சப்போ நான் கொஞ்ச போட்டிகள்தான் ஆடியிருந்தேன். ஆரம்பத்துல காயத்தால வெளியில இருந்ததுதான் கொஞ்சம் சிக்கலாப் போயிடுச்சு. நிச்சயம் அடுத்து நல்லா பெர்ஃபார்ம் பண்ணும்போது வாய்ப்பு கிடைக்கும். எல்லோர் மாதிரியும் நம்ம ஆசையும் அதானே. அது நடக்கும்னு நிச்சயம் நம்பறேன்.

ஐ.எஸ்.எல் ஃபைனல் காலி ஸ்டேடியம்ல விளையாடுனது எப்படி இருந்துச்சு?

அது மிகப்பெரிய ஏமாற்றம். அந்தப் போட்டியப்போ நண்பர்களும் குடும்பத்தினரும் கூட இருக்கணும்னு எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கும். எனக்கும் இருந்துச்சு. ஆனா, சுழ்நிலை அதுக்கு வாய்ப்பு இல்லாம பண்ணிடுச்சு. இந்தச் சூழ்நிலைக்கு அந்த முடிவு சரிதான். ஆனாலும், சின்ன ஏமாற்றம் இருக்கத்தான் செய்யுது. இருந்தாலும், சில நண்பர்கள் ஸ்டேடியத்துக்குப் பக்கத்துல வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போனாங்க. முக்கியமா, கோப்பை முடிஞ்சதும் குழந்தைகளோடு போடோ செஷன் இருக்கும். அதை ரொம்ப எதிர்பார்த்திருந்தேன். அது நடக்காம போயிடுச்சு.

உங்க குடும்பம் பத்தி…

நாங்க மீனவக் குடும்பம். அப்பாதான் எனக்கு குருனு சொல்வேன். அவ்ளோ கத்துக்கொடுத்திருக்கிறார். என்கூடப் பிறந்தவங்க மொத்தம் 7 பேர். ரொம்ப சப்போர்டிவான குடும்பம். எங்க கால்பந்து கனவுக்கு எல்லா உதவியும் செஞ்சாங்க. எங்க பெரிய அண்ணா ஒருத்தர் கொல்கத்தால ரூம் எடுத்து எங்ககூட இருந்தார். எங்களுக்கு சப்போர்டிவா இருக்கணும்னு ரொம்ப ஆசை அவருக்கு. எல்லோரும் அப்படித்தான். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.

(ஆயிடுச்சா என்று அதிர்ச்சியுடன் கேட்க) ஆமா, நிறைய பேருக்கு அது தெரியாது. டீம்லயே நிறைய பேருக்குத் தெரியாது. பெங்களூர்ல நடந்த செமி ஃபைனல் அப்போ அவங்கள ஸ்டாண்ட்ல பார்த்துட்டு ஒரு சிலர் கேட்டாங்க. அப்பத்தான் சிரிச்சிட்டு ஆமானு சொன்னேன். ரிஹான்னே, ரொசேன்னு இரட்டைக் குழந்தைகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.