உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தைக் கடந்துவிட்டது. இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல மாநிலங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே செல்கிறது.

கொரோனா வைரஸ்

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தங்கள் மாநிலத்தில் விரைவில் வைரஸ் கட்டுக்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “தெலங்கானா முழுவதும் சுமார் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Also Read: `கண்டவுடன் சுடும் முடிவுக்கு தள்ளிவிடாதீர்கள்!’ -ஊரடங்கு குறித்து சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

மாநிலத்துக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து செய்யப்பட்டுவருகிறது. நோயாளிகளுக்கு அனைத்து முறையான நடவடிக்கைகள் முடிந்த பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். பிற நாடுகளிலிருந்து தெலங்கானாவுக்குத் திரும்பிய 25,937 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான தனிமைப்படுத்தப்படும் நாள் ஏப்ரல் 7-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, ஏப்ரல் 7-ம் தேதிக்குப் பிறகு புதிய வைரஸ் நோயாளிகள் இருக்க மாட்டார்கள். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு சுயக் கட்டுபாடு மிகவும் அவசியம்” என்று கூறியுள்ளார்.

சந்திரசேகர ராவ்

தொடர்ந்து, விவசாயிகள் பற்றிப் பேசிய அவர், “கிராமங்களிலிருந்து அனைத்து தானியங்களும் வாங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.3,200 கோடிக்கு சந்தை விற்பனைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். தானியங்களைக் கொடுக்க வரும்போது, விவசாயிகள் தங்களின் வங்கி பாஸ்புக்கையும் உடன் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கான பணம் ஆன்லைன் மூலம் வங்கியில் செலுத்தப்படும். கிராமங்களுக்குள் பிறர் நுழைவதை அவர்களே வேலி அமைத்துத் தடுக்கிறார்கள். இது, மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். நாம் கட்டுப்பாட்டைக் கடுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே வைரஸ் பரவலைத் தடுக்கமுடியும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.