கொரோனா வைரஸ் பாதிப்பினால் பொருளாதார ரீதியாக சிக்கலைச் சந்திப்பவர்களுக்கு உதவ 1, 70,000 கோடி ரூபாயை நிவாரண உதவியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்தத் தொகை எப்படி யாருக்குக் கிடைக்கும் என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அத்தியாவசிய நிறுவனங்கள் தவிர அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக இந்த அறிவிப்பினால் இந்தியாவில் சுமார் ஐம்பது கோடிக்கும் அதிகமாக உள்ள தினக்கூலிகளும் அமைப்புசாரா தொழிலாளர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசும் இதற்கு மாற்று ஏற்பாடுகளைக் கையாண்டு வரும் நிலையில் மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை அன்று இது குறித்து தீவிர ஆலோசனையை மேற்கொண்டது.

மத்திய அரசு ஏற்கெனவே நிதிநெருக்கடியில் இருப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்படும் சரிவுகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளைத்தான் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் அறிவித்தார். அந்த அறிவிப்பில் 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை அதனுடன் பருப்பும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் வங்கிக் கணக்குகளில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஜந்தன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 என மூன்று மாதங்களுக்கு வழக்கபடும். இதன்மூலம் 20 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமைச்சரவைக் கூட்டம்

அதே போல் கொரோனா தாக்கத்தில் பாதிக்கப்படுவர்களை சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காப்பீடு செய்யப்படும் என்கிற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள். கட்டடத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் முழுமையாக அனைவருக்கும் போய் சென்றடையுமா என்கிற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் ஆதார் கணக்கோடு வங்கிகளை இணைத்துள்ளவர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்று ஒருதரப்பு சொல்லப்பட்டாலும் ஜந்தன் வங்கி என்று பிரதமர் மோடியால் அறிவிக்கபட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இந்த நிதி உதவி வந்தடையும் என்கிறார்கள். இருபது கோடி வங்கிக் கணக்குகள் மட்டுமே ஜந்தன் வங்கியில் உள்ளது. அதே போல், வங்கிக்கணக்குகள் தொடர் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் நிலை இதன்மூலம் கேள்விக்குறியாக உள்ளது.

இது குறித்த பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் கேட்டபோது “ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருபது ரூபாய் ஊதிய உயர்வு என்பது ஆண்டுதோறும் கொடுக்கப்படும் ஊதிய உயர்வைதான் அறிவித்துள்ளார்கள். அதுவும் வேலை கிடைத்தால் மட்டுமே அந்த ஊதியம் அளிக்கப்படும். முன்கூட்டியே வழங்கப்படுவதாகச் சொல்லப்படவில்லை.

வெங்கடேஷ் ஆத்ரேயா

அதே போல் விவசாயிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிலம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு மட்டுமே இந்தத் தொகை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆண்டுக்கு ஆறாயிரம் என்று பட்ஜெட்டில் சொன்னதைத்தான் இப்போது இதற்கு என்று அறிவித்துள்ளார்கள். அதிலும் சிறு, குறு விவசாயிகள் என்கிற உச்சவரம்பு இல்லாமல் நிலம் உடைய அனைவருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பண்ணையார்கூட பணம் வாங்கலாம். ஆனால் விவசாயத் தொழிலாளி வாங்கமுடியாது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏழு கிலோ கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. அதை இவ்வளவு நாள் கொடுக்காமல் இப்போது கொடுக்க நினைப்பதை பாராட்டலாம்.

அதைப் போல் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 500 என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது குறைந்த தொகை. மத்திய அரசு 80 கோடி பேருக்கு இதன் மூலம் பயன் என்று சொல்கிறார்கள். ஆனால், அவ்வளவு நபர்களுக்குப் பயன்தருமா என்பது சந்தேகம். இவ்வளவு நெருக்கடியை மத்திய அரசு சந்திக்கக் காரணம் பட்ஜெட்டுக்கு முன்பே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இரண்டே கால் லட்சம் கோடிக்குப் பல சலுகைகளை வாரி வழங்கியது. அவர்களா இப்போது மக்களுக்கு வந்து நன்மை செய்யப்போகிறார்கள்? குறிப்பாக உணவு மானியத்தைப் பாதியாகக் குறைத்தீர்கள். இப்போது நாட்டின் நிலை மோசமாகும் போது யார் வந்து உதவப்போகிறார்கள்? தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து அவர்களுக்கு தொகையை வழங்குவதாக அறிவித்தது என்ன நியாயம்?.

மத்திய பட்ஜெட்

உற்பத்தியே நடக்காத இதுபோன்ற நேரங்களில் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். பொருளாதார நிபுணர்கள் இந்தப் பிரச்னையை அப்போது சுட்டிக்காட்டினோம். இந்த 1 லட்சத்து எழுபதாயிரம் கோடியை எப்படித் தயார் செய்யப்போகிறார்கள் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே பல பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுவிட்டன. இனி எதை விற்று இந்த நிலைமையைச் சமாளிக்கத் திட்டமிட்டுகிறது என்பதை விளக்கவில்லை. உண்மையில் சிறிய மாநிலமான கேரளாவில் செயல்படுத்தும் திட்டத்தைக்கூட மத்திய அரசு செய்யவில்லை.

தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் கூட எதையாவது திட்டமிடுகிறார்கள். அதற்கும் போதிய நிதி உதவி செய்யவில்லை. உண்மையில் மூன்று லட்சத்து எழுபதாயிரம் கோடி ஒதுக்கினால் மட்டுமே முழுமையான நிவாரணம் சரியாக வழங்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்லியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. பல வருவாய் இழப்புகளை அரசு சந்தித்துவிட்டது. எனவே, பட்ஜெட்டில் அறிவித்ததை புதியதாக இதற்கு அறிவித்ததுபோல காட்டுகிறார்கள். ஆனால் எப்படியோ மக்களுக்குக் குறைந்தபட்ச நிவாரணமாவது கிடைக்க வேண்டும். குறிப்பாக தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் வலுவான நிதி ஒதுக்கீட்டை இந்த அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும்” என்றார்.

Also Read: 21 நாள் ஊரடங்கு… இந்தியப் பொருளாதாரம் பற்றி நிறுவனங்களின் மதிப்பீடும் பரிந்துரைகளும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.