ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டுப் படகு மூலம் மீன்பிடிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். தமிழக கடல் பகுதியில் போதிய மீன்வளம் இல்லாத நிலையில் இவர்களில் நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் மீன்பிடி கூலிகளாக கடலுக்குச் சென்று வருகின்றனர்.

கிராம மக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் இதற்கென தமிழக மீனவர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் அச்சம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் மங்களூர் பகுதியில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க முடியாத நிலையும் உருவானது. இதையடுத்து மங்களூரில் தங்கியிருந்த 664 மீனவர்கள் வாடகை கார், வேன்களில் ராமநாதபுரம் புறப்பட்டனர். கர்நாடக மாநில எல்லையில் இவர்களை வழிமறித்த போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் இவர்களுக்கு கொரானோ சோதனை மேற்கொண்டதுடன், அங்கிருந்து தமிழக எல்லைக்குள் கால்நடையாக அனுப்பி வைத்தனர்.

தாளவாடி சோதனை சாவடி முன் மீனவர்கள்

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி சோதனை சாவடிக்கு வந்த இவர்களுக்கு தமிழக அதிகாரிகளால் கொரானோ சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிந்த நிலையில் மீனவர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப வாகனங்கள் ஏதும் இன்றியும், தங்க இடம் இன்றியும் பரிதவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ஈரோடு மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீனவர்களை ராமநாதபுரத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Also Read: `மருத்துவருக்கு பாசிட்டிவ்; தனிமைப்படுத்தப்பட்ட 8 பேர்’ – அமேசான் பழங்குடிகளையும் துரத்தும் கொரோனா?

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட 664 மீனவர்களுக்கு கொரானோ தொற்று உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்ததால் 14 நாள்கள் அவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மாவட்டத்தின் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு மாணவியர் விடுதி, பேரையூர் நம்மாழ்வார் வேளாண் கல்லூரியில் 153 மீனவர்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து பசும்பொன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்க மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

கல்லூரி முன் மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த பசும்பொன், நந்திசேரி, நெடுங்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கொரானோ பாதித்தவர்களை தங்கள் பகுதியில் தங்க வைக்கக் கூடாது என கூறி கல்லூரியின் முன்திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சமாதான முயற்சியை கிராம மக்கள் ஏற்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் 153 மீனவர்களையும் பரமக்குடி பகுதியில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் தங்க வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.