`சிங்கம் போல நடந்து வரான் செல்லப்பேராண்டி…” என்று உற்சாகம் அளிக்கும் ஹைபிச்சில் ஒலிக்கும் `தூள்’ படப் பாடலை மக்கள் மறந்துவிட முடியாது. அந்தக் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான பரவை முனியம்மா, உடல்நலக் குறைவால் 74 வயதில் தன் மூச்சை இன்று அதிகாலை நிறுத்திக்கொண்டார்.

பரவை முனியம்மா குடும்பம்

பிரபல மக்கள் இசைக் கலைஞரும் பல திரைப்படங்களில் நடித்தவருமான பரவை முனியம்மா கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில், இன்று காலை மரணமடைந்த தகவல் கேட்டு திரையுலகினரும் நாட்டுப்புறக் கலைஞர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்தவர் முனியம்மா, சிறு வயது முதலே தன்னுடைய கணீர்க்குரலால் மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்களையும் நாட்டார் தெய்வங்களையும் பாடி புகழ்பெற்றார். அப்பாடல்கள் இசைத் தொகுப்புகளாக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பரவை முனியம்மா

அந்தப் புகழ் மூலம் தமிழ்த் திரைப்படங்களிலும் பாடி நடித்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்தார். ‘சிங்கம்போல நடந்து வரான்…’ என்று, விக்ரம் நடித்த தூள் படத்தில் அவர் பாடி நடித்தது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரியளவில் ஹிட்டானது.

பல நாடுகளுக்குச் சென்று நாட்டுப்புற இசைக் கச்சேரி நடத்தி உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்ட பரவை முனியம்மா, திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் கிராமத்து சமையல் பற்றி தொலைக்காட்சியில் நடத்திய நிகழ்ச்சியும் பெரிய அளவில் பேசப்பட்டது. கடைசியாக சிவகார்த்திகேயனுடன் `மான் கராத்தே’ படத்தில் நடித்தார்.

பரவை முனியம்மா

அதன் பின் அவர் உடல் நலிவுறத் தொடங்கியது. சிறுநீரகக் கோளாறால் கடந்த சில வருடங்களாக உடல் நலமில்லாமல் இருந்து வந்த பரவை முனியம்மாவுக்கு அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 5 லட்ச ரூபாவை டெபாசிட் செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

கடந்த வருடம் மிகவும் சீரியசான நிலையில் அவர் கஷ்டப்படுகிறார் என்று அவர் உறவினர்கள் கூறிய தகவலை நாம் வெளியிட்டோம். அதன் பின் அவருக்கு சிவகார்த்திகேயன் உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் நிதி உதவி செய்தனர். மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை இலவச சிகிச்சை அளித்து வந்தது. இருந்தாலும், அவர் உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பரவை முனியம்மா

நம்மிடம் பேசிய அவர் உறவினர்கள், “பரவை முனியம்மாவுக்கு 3 பெண் 3 ஆண் என 6 பிள்ளைகள். ஒரு மகனைத் தவிர அனைவரும் திருமணம் ஆகிவிட்டது. மன வளர்ச்சி குன்றிய அந்த மகனை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அந்த மகனை நினைத்தே மிகவும் கவலையுடன் இருந்து வந்தார்.

அவர், சினிமாவில் நடித்திருந்தாலும் பல கச்சேரிகளைச் செய்திருந்தாலும் வந்த வருமானத்தை சேர்த்து வைக்கவில்லை. கடைசிக் காலத்தில் மருத்துவ செலவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது” என்றனர்.

பரவை முனியம்மா

போதிய கல்வியைப் பெறாமல், கிராமத்தில் சாதராணக் குடும்பத்தில் பிறந்து விவசாயக் கூலியாக வேலை செய்து, தன் இசைத்திறமையால் உலகத்தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு, தமிழக அரசு விருது பெற்றவர் முனியம்மா. தனது ஊர் பெயராலேயே `பரவை’ முனியம்மா என்றழைக்கப்பட்ட அந்த இசைப்பறைவை தனது மூச்சை நிறுத்திக்கொண்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.