`பெருந்தொற்று’ கொரோனாவுக்கு எதிராக உலக அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நட்வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், 21 நாள்கள் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசும் முன்னெச்சரிக்கை மற்றும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோக்களை கார்ட்டூன் வடிவில் குழந்தைகளுக்குப் பிடித்தது போல மாற்றி வெளியிட்டுவருகிறார், மதுரை டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன். எளிமையாக குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் கார்ட்டூன் வடிவில் அவரது விழிப்புணர்வு முயற்சிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

தலைமை ஆசிரியர் சரவணன்

இதுகுறித்து சரவணனிடம் பேசினோம்.“என்னுடைய பள்ளியில் தொடர்ந்து கதை சொல்லல் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியோடு நல்ல பழக்கவழக்கங்களை நேரடியாக சொல்லிக் கொடுக்கும்போது கசப்புத் தட்டும். அதுவே, தேன் தடவியதுபோல் கதை சொல்லல், பாட்டு, பொம்மலாட்டம், உள்ளிட்ட வடிவங்களில் கொடுக்கும்போது ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள். மாணவர்களுக்குப் பிடித்ததுபோல பாடம் எடுப்பதுதான் எனுக்கும் பிடிக்கும். அதைத்தான் தொடர்ந்து செய்கிறேன்.

அதேபோல், விடுமுறை நாள்களில் பிற பள்ளிக் குழந்தைகளுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று விளையாட்டு பாணியில் எல்லா நல்ல விஷயங்களையும் நண்பனாகக் கொண்டு சேர்க்கிறேன். மாணவர்களுக்காக என்னை கோமாளியாக மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டேன். கொரோனோ பாதிப்பு சீனாவில் ஏற்பட்டபோதே, உலக சுகாதார மையத்தின் இணையத்தில் தெரிந்துகொண்டேன். இதனால் அப்போதே இதற்கான விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

பள்ளி மாணவர்களுடன் கோப்பு படம்

குழந்தைகளுக்கு முறையான விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், நான் என் மகள் லீலா மது ரித்தா மற்றும் என் மகன் சத்ய ஜித்துடன் இணைந்து, கொரோனா குறித்த அனிமேசான் வீடியோவை உருவாக்கி, அதற்கு நாங்களே டப்பிங் பேசி வாட்ஸ்ஆப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.

இதுவரை கொரோனா குறித்து ஆறு வீடியோக்களை வெளியிட்டுள்ளோம்.

விழிப்புணர்வு கார்ட்டூன் வீடியோ

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எவ்வாறு என்பது குறித்தும், பரவலைத் தடுக்க தனித்து இருப்பதன் அவசியம் குறித்தும், விடுமுறை விடப்பட்டதன் காரணம் குறித்தும் , சோப்பு போட்டு கழுவும் முறை மற்றும் காரணம் குறித்தும் குழந்தைகளைக் கவரும் வண்ணம் வீடியோக்களை உருவாக்கியுள்ளோம்.

அனிமேஷன் பயன்படுத்தினால் மாணவர்களைக் கவர முடியும் என்று தோன்றியது. எனது மகள் லீலா மது ரித்தாவுடன் இணைந்து ப்ளான்டன் ஆப் மூலமாக முதல் வீடியோ தயாரித்து, எங்கள் பள்ளிக் குழந்தைகள் , ஆசிரியர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு அனுப்பினோம்.

அனிமேசன் உருவாக்கும் போது

அனைவரும் வரவேற்றனர். உலக சுகாதர மைய அறிக்கைகளை வாசித்து, செய்திகளை வீடியோவாக மாற்றி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இது, குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்துள்ளதால், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.