சீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்குதல், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அதைத் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழக அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, சீல் வைத்துள்ளது. காய்கறி, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரூர் அரசு மருத்துவமனை

இந்தநிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவரை, அதே ஊரைச் சேர்ந்த நபர் கத்தரிக்கோலால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கொரோனா ஊரடங்கு உத்தரவு – சொந்த ஊருக்கு டூவீலரில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். மொத்தமாகக் காய்கறிகள் வாங்கி வந்து, உள்ளூர் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பிச்சம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு உதவும்படி காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி ரேவதியிடம், காய்கறிகளை அள்ளிக் கொடுப்பதற்கு வசதியாகத் தட்டுக்கூடையை வாங்கி வந்திருக்கிறார். அந்தத் தட்டுக்கூடையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு காய்கறி அள்ளி எடைப்போட்டு விற்பனை செய்து வந்தார்.

கொரோனா வைரஸ்

இந்தச் சூழலில், ராஜேந்திரன் தன் மனைவியிடம் தட்டுக்கூடை வாங்கிப் போனதைக் கேள்விப்பட்ட ராஜேந்திரன், “அவன் வியாபாரம் பாத்து ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்க, நம்ம தட்டுக்கூடையைக் கொடுத்திருக்கிறியா?’ என்று தன் மனைவியைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, `தட்டுக்கூடையைக் கொடு. இல்லைன்னா, நடப்பதே வேறு’ என்று அவர் அரவிந்தனையும் மிரட்டியதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரவிந்தன், ‘உங்க தட்டுக்கூடைதான். வியாபாரம் முடிஞ்சதும் கொடுத்துவிடுகிறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அதைக் காதில் வாங்காத ராஜேந்திரன்,`நீ சம்பாதிக்க என் தட்டுக்கூடையை நான் தரணுமா? மரியாதையா கொடு’ என்று கூறி, தகாத வார்த்தைகளால் அரவிந்தனைத் திட்டியிருக்கிறார். இதனால், இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ராஜேந்திரன், ‘என்னோட தட்டுக்கூடையைக் கேட்டால், திட்டுறியா?’ என்றபடி, தனது கையில் இருந்த கத்தரிக்கோலால் அரவிந்தனை தாக்கியிருக்கிறார். இதனால், அரவிந்தனின் வலது கையின் கீழும், இடது மார்பின் மேலேயும் கடுமையான காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்திருக்கிறது. அரவிந்தன் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, ராஜேந்திரனை மடக்கிப் பிடித்தனர்.

மாயனூர் காவல் நிலையம்

படுகாயமடைந்த அரவிந்தனை சிகிச்சைக்காக கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக அரவிந்தனை, கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சேர்த்தனர். இந்த நிலையில், அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், அவரைக் கத்தரிக்கோலால் குத்திய ராஜேந்திரன் மீது மாயனூர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தட்டுக்கூடைக்காகக் காய்கறி வியாபாரியைக் கத்தரிக்கோலால் ஒருவர் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.