“கொரோனா தொற்றால் உலக மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம். நோய் வந்த பின் மருத்துவம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நோய்வர இடம்கொடுக்காதவாறு உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதும் முக்கியம்.

சுத்தமான நீர்

இதைத்தான் ஆயுர்வேதத்தில் ‘சரீர பரிபாலனம்’ என்கிறோம். அதாவது, உடல்நலனைப் பாராமரிப்பது. அதிலும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடலைப் பராமரிப்பது மிக அவசியம். சத்தான சரிவிகித உணவும் சுத்தமான நீரும்தான் உடலைப் பேணுவதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் 2.5 – 3 லிட்டர்வரை நீர் அருந்துவது பரிந்துரைக்கப்படும் நிலையில், 3 லிட்டரையும் தண்ணீராகவே அருந்துவது சலிப்படைய வைக்கலாம். எனவே, நாவுக்கு சுவையூட்டும் அதே நேரம் உடல் நலனுக்கும் பலன் தரும் பானியங்களை அருந்தலாம்.

ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

நாம் அருந்தும் குடிநீரில் துளசி, கற்பூரவல்லி போன்று வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களைச் சேர்த்து எளிமையான முறையில் தயாரிக்கப்படும் பானம்தான் ‘பானியம்’. தாகத்துக்குக் குடிநீர் அருந்துவதற்குப் பதில் இந்தப் பானியத்தை அருந்தலாம்” என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன், தேநீர் மற்றும் காபிக்குப் பதிலாக உடலுக்கு உற்சாகம் தரும் சில பானகங்கள் மற்றும் குடிநீருக்கு மாற்றான சில பானியங்கள் தயாரிப்பு முறைகளை விளக்குகிறார்.

பானியங்கள்

வெட்டிவேர் பானியம்

சுத்தப்படுத்தப்பட்ட வெட்டிவேரை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீரைச் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.

வெட்டிவேர்

தண்ணீருக்குப் பதிலாக, தாகம் எடுக்கும்போதெல்லாம் இந்தப் பானியத்தை அருந்தினால் கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படும்.

வில்வ பானியம்

நன்கு அலசிய வில்வ இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்கவைத்து ஆற வைக்கவும். தாகம் எடுக்கும்போது குடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம்.

வில்வ இலை

இது ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதுடன் சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.

துளசி பானியம்

நன்கு அலசிய துளசி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும். குடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம்.

துளசி

இதன் ஆன்டிபாக்டீரியல் தன்மை, நுரையீரல் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.

கற்பூரவல்லி பானியம்

நன்கு அலசிய கற்பூரவல்லி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.

கற்பூரவல்லி

தாகத்துக்கு இந்தப் பானியத்தை அருந்தினால் சளி ஏற்படாமல் தடுக்கும்.

புதினா பானியம்

நன்கு அலசிய புதினா இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆறவைக்கவும்.

புதினா

குடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம். இது அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.

சீரக பானியம்

சீர் + அகம் = சீரகம். அகத்தைச் சீர்படுத்துவதால்தான் இது ‘சீரகம்’ எனப்படுகிறது. சுத்தமான சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீரை சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.

சீரகம்

தண்ணீருக்குப் பதிலாக, தாகம் எடுக்கும்போதெல்லாம் இந்தப் பானியத்தை அருந்தினால் குடற்பகுதியைச் சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

Also Read: நஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு!

பானகங்கள்

எலுமிச்சை பானகம்

ஒரு எலுமிச்சையின் சாற்றுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்து, இதனுடன் ஒன்றுக்கு நான்கு (1:4) எனும் விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

எலுமிச்சை

இப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன், சோர்வை நீக்கி புத்துணர்வு அளிக்கக்கூடியது. பசி இல்லாமல் இருப்பவர்களும் அஜீரணக்கோளாறு உள்ளவர்களும், ஒரு கடுகளவு பச்சைக் கற்பூரத்தை இதில் சேர்த்துக்கொள்ளலாம். இதை நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் அருந்தலாம்.

மாதுளம்பழ பானகம்

ஒரு மாதுளம் பழத்தின் சாற்றுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்தூள் சேர்த்து, இதனுடன் ஒன்றுக்கு நான்கு (1:4) எனும் விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும்.

மாதுளம்பழம்

இப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன் வயிற்று எரிச்சலைப் போக்கும். நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் அருந்தலாம்.

புளி பானகம்

புளிக்கரைசலுடன் தண்ணீரை, முறையே 1:6 என்கிற விகிதத்தில் கலந்துகொள்ளவும். இதனுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்தூள் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும்.

புளி

இப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன் குமட்டல் பிரச்னையைப் போக்கும். நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் மட்டும் அருந்தலாம்.”

Also Read: கொளுத்தும் வெயில்… குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.