வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப்பட்ட கரீபியன் தீவுகளின் வடக்கில் அமைந்திருக்கிறது கியூபா. ஒற்றைக் கட்சி ஆட்சி நடக்கும் கம்யூனிஸ்ட் நாடு. பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ என காஸ்ட்ரோ குடும்பத்தினரின் 60 ஆண்டுக்கால ஆட்சியைக் கடந்து, 2018-ம் ஆண்டு முதல் புதிய அதிபரான மிகுவல் டியாஸ் கேனில் தலைமையின் கீழ் தற்போது இயங்குகிறது.

கியூபா- அமெரிக்கா

உலகமே covid -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதலால் பிரச்னையில் இருக்க, அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கும் ஒரு சில நாடுகளில் ஒன்று கியூபா. தன்னை காத்துக்கொள்வது மட்டுமன்றி உலகைக் காக்க தன் நாட்டின் மருத்துவர்களை இத்தாலி உட்பட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகிறது கியூபா. உலகின் மிக வளர்ந்த நாடுகளே கொரோனாவின் பிடியில் சிக்கித் திணற, ஏழ்மையான மூன்றாம் உலக நாடான கியூபா எனும் சின்னஞ்சிறிய தீவில், இது எப்படிச் சாத்தியமானது? காரணம், பல ஆண்டுக் காலமாக மிக உறுதியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கியூபாவின் சுகாதாரத்துறை.

உலக அளவில் ஹெல்த்கேர் எனப்படும் சுகாதாரத்துறையிலும் கல்வியிலும் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது கியூபா. தற்போது நட்பு பாராட்டினாலும், கியூபாவின் நீண்ட காலப் பகையின் காரணமாகக் கியூபா மீது பல ஆண்டுகளாகப் பொருளாதாரத் தடை விதித்து இருக்கிறது அமெரிக்கா. உலக நாடுகளால் தனித்து விடப்பட்ட கியூபா, தன்னுடைய அன்றாட தேவைகளுக்கான அத்தியாவசிய பொருள்களுக்கே தட்டுப்பாட்டுடன்தான் இயங்குகிறது. தொழில்நுட்பத்தில் அமெரிக்காவைவிடப் பின்தங்கிய, மருந்துகளுக்குக்கூட தட்டுப்பாடு இருக்கும் கியூபா மருத்துவச் சேவைகளிலும் நாட்டின் பொதுச் சுகாதாரம், அதிகமான சராசரி ஆயுட்காலம், குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் என வளர்ந்த நாடுகளுக்கு இணையாகக் கோலோச்சுகிறது.

கொரோனா வைரஸ்

உலகிலேயே அதிகப்படியான மருத்துவர்கள் கொண்ட நாடு கியூபா, அதாவது, கியூபாவில்தான் 10,000 பேருக்கு 67 மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஒரு சர்வே. சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக, கியூபாவின் வருமானத்தில் மிக முக்கியமானது வெளிநாடுகளுக்கு பணிக்குச் செல்லும் கியூபா மருத்துவர்களின் வருமானம். சுமார் 67 நாடுகளில் 50,000-க்கும் அதிகமான மருத்துவர்கள் வேலை செய்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரங்கள். காரணம் மருத்துவப் படிப்புகளுக்குக் கியூபா அளிக்கும் முக்கியத்துவம் அப்படியானது.

கொரோனாவை கியூபா சிறப்பாக எதிர்கொள்ள, அதன் சுகாதாரத் துறையின் மிகச் சிறந்த கட்டமைப்பே காரணம். கியூபாவில், ஒரு தனியார் மருத்துவமனைகூட கிடையாது, அங்கு உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அரசாங்கத்தால் நடத்தப்படுபவைதான். ஒவ்வொரு குடிமகனின் உடல்நலத்திற்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக ரீதியான தேவைக்கு அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. கியூபாவின் மருத்துவ சேவை கட்டுமானம் வித்தியாசமானது. அங்கு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவர் குழு நியமிக்கப்படுகிறது. (உதாரணத்திற்கு நம்ம ஊர் வார்டு கவுன்சிலர் போல) இந்தக் குழு தனித்தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளைச் (ரெகுலர் செக் அப், நோய் கண்டறிதல்) செய்து அரசிடம் ரிப்போர்ட் சமர்ப்பிக்கும், இவை தாண்டி, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறு மருத்துவமனையும் உண்டு. இப்படி ஐந்து அடுக்குகளில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது கியூபாவின் சுகாதாரத்துறை.

Also Read: கொரோனா வைரஸ்: வடகொரியா நிலவரம்தான் என்ன?

இப்படி, சிறப்பான ஒரு மருத்துவ நிர்வாகம் இருப்பதால், கொரோனா அச்சத்தைச் சிறந்த முறையில் எதிர்கொண்டுள்ளது கியூபா. இதுவரை 57 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 950 பேருக்குத் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாகத் தொற்று இருப்பவர்களைக் கண்டறிவது நோய் பரவாமல் தடுக்கிறது. மேலும், மக்கள் அச்சம் கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் என ‘keep calm’ என்று அறிவுறுத்தியது அரசு. இதன் காரணமாக அங்கு பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படவும் இல்லை. இருப்பினும் விளையாட்டுப் போட்டிகள், பெரும் விழாக்கள் என மக்கள் பெருமளவில் கூடும் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கையில் அங்கு பெரும் மாற்றங்கள் இல்லை. தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.

மார்ச் 11, அன்று அங்கு முதல் கொரோனா வைரஸ் தொற்று மூன்று பேருக்கு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் மூவரும் இத்தாலியைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள். அவர்கள் உடனடியாகத் தனிமைப் படுத்தப்பட்டனர்.

கியூபா மருத்துவர்கள்

மார்ச் 12 , நான்காவதாக ஒரு நபருக்குத் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இவர் கியூபா குடிமகன். இவர் மனைவி இத்தாலி சென்று திரும்பியவர். இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்தன. ஆனால், இவர் மனைவியை இந்தத் தொற்று பாதிக்கவில்லை. அவருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

Also Read: `களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகமாகிவிட்டது’ – கொரோனா பாதிப்புக்கு ரூ.1,500 கோடி அறிவித்த டாடா

கியூபா துறைமுகத்தில் கொரோனா பாதித்த கப்பல்

மார்ச் 16 அன்று, ஆயிரம் பயணிகளை ஏந்திய MS ப்ரேமார் எனும் சொகுசுக் கப்பல் கியூபாவின் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டது. பஹாமாஸ் நாட்டால் அனுமதி மறுக்கப்பட்ட இந்தக் கப்பலுக்குக் கியூபா அனுமதி அளித்தது உலக அளவில் பேசு பொருளானது. அந்நாட்டின் மனிதாபிமானத்தை உலக நாடுகள் வெகுவாகப் புகழ்ந்தன. அதில் ஐவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இவைதவிர்த்து பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்து அந்நாட்டு மக்களைச் சொந்த நாடு திரும்ப வழி வகை செய்தது கியூபா.

மார்ச் 18 நோய்த்தொற்றுடன் கண்டறியப்பட்ட 61 வயது இத்தாலியப் பயணி ஒருவர் மரணமடைந்தார். மார்ச் 20 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்ததை அடுத்து, மார்ச் 24 முதல், கியூபாவின் மக்களைத் தவிர வேற்று நாட்டவர் அந்நாட்டிற்குள் நுழையத் தடைவிதிப்பதாக அறிவித்தது கியூபா அரசு. மற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்க. கியூபாவில் இதுவரை 40 பேர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்நாட்டின் சிறப்பான மருத்துவ பராமரிப்பும், (Preventive medical care) வருமுன் காக்கும் மருத்துவ முறைகளுமே இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. கியூபாவில் வழக்கமாகச் சீருடை தயாரிக்கும் தொழிற்சாலைகள், பெருமளவில் தற்போது முகமூடிகள் தயாரித்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணித்த கப்பல்

தற்போது, உலகம் இருக்கும் இக்கட்டான சூழலில், வெளிநாட்டவர்கள் கியூபாவிற்கு வர அந்நாடு தடை விதித்ததை அடுத்து, சுற்றுலாத்துறை வீழ்ந்து பெரும் பொருளாதார சிக்கலைச் சந்திக்கும். அப்படியிருந்தும் தன்னுடைய மருத்துவர்களை இலவசமாகச் சேவை செய்ய உலகம் முழுவதும் அனுப்பிக் கொண்டிருக்கிறது கியூபா. கியூபாவின் இந்த மனித நேயத்தைக் கண்டு நெகிழ்ந்துபோயிருக்கிறது உலகம். வெனிசுலா, நிகாராகுவா, ஜமைக்கா, சுரினாம், இத்தாலி போன்ற பல நாடுகளுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்கிறது கியூபா அரசு. இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே மருத்துவ சேவையை லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செய்துகொண்டிருக்கிறது கியூபா.

Covid -19 வைரஸ் தொற்றிற்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது கியூபா. இந்த நோயை எதிர்கொள்ளும் 30 மருந்துகளில் ஒன்றாகக் கியூபாவின் கண்டுபிடிப்பான Interferon Alfa-2B, எனும் மருந்தையும் பயன்படுத்தியது சீனா. இன்று உலகம் முழுக்கவே இந்த மருந்து covid -19 கொரோனா வைரஸிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read: `குறுகிய மனப்பான்மை இருக்காது என நம்புகிறோம்!’-இந்தியாவுக்கு சீனாவின் கோரிக்கை #Corona

தனக்கு எதிராக எத்தனை கணைகள் தொடுக்கப்பட்டாலும் அவற்றைத் தாங்குவது மட்டுமன்றி, பதிலுக்கு நன்மையைச் செய்துகொண்டிருக்கிறது கியூபா. 2005-ம் ஆண்டு கத்ரீனா புயல் அமெரிக்காவைத் தாக்கியபோது, பகையை எல்லாம் மறந்து சுமார் 1,500 மருத்துவர்களை அமெரிக்காவின் மீட்புப் பணிகளுக்கு அனுப்ப ஆயத்தமானது கியூபா. ஆனால், அமெரிக்கா அதை ஏற்க மறுத்தது அந்நாட்டு வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களானது. கியூபாவின் அரசும் சரி, மக்களும் சரி… அந்நாட்டின் மீதான அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, மதம், இனம், தேசம், மொழி என அத்தனை வேறுபாடுகளையும் கடந்து மனிதத்தை உயர்த்திப்பிடிக்கும் நாடு எனக் கியூபா உயர்ந்து நிற்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.