ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள எழுவர்களில் ஒருவரான இரா.பொ.ரவிச்சந்திரன், தான் சிறையில் பணி செய்ததற்காகக் கிடைத்த ஊதியத்தில் இருந்து 5,000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்த, நிதி உதவி செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் அனைவருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வந்தனர். அந்தவகையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் 5,000 ரூபாயை அவரது வழக்கறிஞர்கள் திருமுருகன், முத்து ஆகியோர் மூலம் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நேற்று வழங்கியுள்ளார்.

நிதியுதவி

சிறைவாசிகள் சிறையில் செய்யும் பணிகளுக்கு அவர்களுக்கு ஊதியம் உண்டு. ஆனால், மாதம்தோறும் அளிக்கப்படும் அந்த ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சிறைவாசிகளிடம் அளிக்கப்படும். மீதமுள்ள இரண்டு பங்கு தொகையில் ஒரு பங்கு சிறைவாசிக்கான நிர்வாகச் செலவுக்காகவும், மற்றொரு பங்கு சிறைவாசிகளின் மறுவாழ்வு நிதிக்காகவும் சிறை நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்படும். அந்த வகையில் தனக்குக் கிடைத்த ஒரு பங்குத் தொகையில் சேமித்த பணத்தில் இருந்து இத்தொகையை இரவிச்சந்திரன் அளித்துள்ளார்.

Also Read: ‘ஒரு லட்சம் கையெழுத்து!” – ராஜீவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலைக்கு ‘செக்’

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் விரைவில் விடுபட வேண்டும் என தாம் வேண்டிக் கொள்வதாகவும், இத்தகைய பெரும் துயரில் வாடும் தமிழக மக்களுக்காகத் தன்னால் இயன்றதை அளித்துள்ளதாகவும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ரவிச்சந்திரன்

“உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு ஒன்றில், கொரோனா அச்சுறுத்தல் வலுவாக உள்ள நிலையில், சிறைகளில் இருக்கும் 60-வயதுக்கும் மேற்பட்டவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், சிறு குற்றங்கள் புரிந்தவர்கள் ஆகியோருக்கு கொரோனா அச்சுறுத்தல் தீரும்வரை வீட்டில் இருக்கும் வகையில் நீண்ட சிறை விடுப்பு ( பரோல்) வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் தான் உட்பட எழுவருக்கும் இந்த நெருக்கடி நேரத்தில் நீண்ட சிறைவிடுப்பு அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும்” என்றும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரவிச்சந்திரன் ஏற்கெனவே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.20,000 நன்கொடை வழங்கியிருந்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.