தேனி உழவர் சந்தையில் புதிய முயற்சியாக 18 வகையான பொருள்களைக் கொண்டு, காய்கறித் தொகுப்புப் பை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தேனி மீறு சமுத்திரக் கண்மாய் அருகே செயல்பட்டுவந்த தேனி உழவர் சந்தை, தற்போது, தேனி புதிய பேருந்துநிலையத்தில் செயல்பட்டு வருகிறது. 3 அடி இடைவெளியில், மக்கள் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், மக்கள் அதிக நேரம் வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்வதைத் தவிர்க்கவும் காய்கறிகளை வாங்குவதை எளிமையாக்கவும், காய்கறித் தொகுப்புப் பையை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது தேனி உழவர் சந்தை நிர்வாகம்.
Also Read: `போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், ஆதரவற்றோருக்காக சமுதாய உணவுக்கூடங்கள்!’ – அசத்தும் தேனி
இதில், கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட் தொடங்கி கருவேப்பிலை, கொத்தமல்லி வரை மொத்தம் 18 வகையான பொருள்கள் உள்ளன. சற்று வித்யாசமாகவும் அன்றாடம் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் உள்ளதாலும், மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

Also Read: `வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு
இதுதொடர்பாக, தேனி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, “உழவர் சந்தை என்றாலே, அன்றாடம் விவசாயிகள், தங்களது தோட்டங்களில் இருந்து கொண்டு வரும் புதிய காய்கறிகள் இருக்கும் இடம் என்றுதான் அர்த்தம். அதனால், மக்கள், தினசரி, காய்கறி வாங்க இங்கே வருகிறார்கள். இன்று, விவசாயிகளின் ஒத்துழைப்போடு 18 வகையான பொருள்களைக் கொண்டு காய்கறித் தொகுப்புப் பையை ரெடி செய்து, சோதனை முயற்சியாக 10 பைகளை மட்டும் விற்பனைக்காக வைத்திருந்தோம். விலை 150 ரூபாய் மட்டுமே. இதனை பார்த்த மக்கள், விசாரித்துவிட்டு, வாங்கிச் சென்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைவிட, சந்தைக்குள் நுழைந்ததும் அனைத்துக் காய்கறிகளும் இருக்கும் பையை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்” என்றார்.