‘பாகுபலி’ பட இயக்குநர் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா தடுப்பு நடவடிக்கையினால் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் நிலவி வருகிறது. திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதாலும் மக்கள் வெளியே நடமாட முடியாத வகையில் ஊரடங்கு நிலவுவதாலும் ஒட்டு மொத்த திரைத்துறையும் முடங்கிப் போய் உள்ளது.

image

கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்பே ஏப்ரல் மாதம் இப்படத்தின் வெளியீடு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவால் எல்லா திட்டங்களும் முற்றிலும் மாறின. அதனையடுத்து விஜய் தனது 65வது படத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடிகர் விஜய் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமெளலி ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற மெகா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இரண்டு மோஷன் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதற்குப் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பும் கிடைத்தது.

image

இதனிடையே தான் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இயக்குநர் விஜய்யைத் தனது படத்தில் நடிக்க வைக்கப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் தோன்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல மொழிகளில் தயாராகும் மெகா பட்ஜெட் படம் என்பதால் இது வியாபார ரீதியாக உதவும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடைசியாக பிரபுதேவா இயக்கத்தில், அக்‌ஷய் குமார் நடித்திருந்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் விஜய் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.