கொரோனா கிருமி பரவுவதை தடுக்கும் பணியில் அஜித்தின் ‘டீம் தக்ஷா’ சேவை செய்து வருகிறது.
கொரோனா வைரஸ் விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தேவையில்லாமல் யாரும் சாலையில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகிறார்கள்.
மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே மக்கள் நலனுக்காகவும் தங்களது சேவையைச் செய்வதற்காகவும் வெளியே வர அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அரசின் நடவடிக்கைகளுக்கு உதவு விரும்புகின்றவர்கள் முறைப்படி தங்களைப் பதிவு செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸை எதிர்த்து சேவையாற்ற அஜித்திடம் பயிற்சி பெற்ற இளைஞர் குழு தமிழக அரசுக்கு உதவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், எல்லா இடங்களிலும் ஆன்டி செப்டிக் மருந்துகளை தெளிப்பதற்கு சுகாதார ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. பற்றாக்குறையே உள்ளது. ஆகவே கிருமிநாசினி மருந்தை ட்ரோன்களைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்லூரி மாணவர்கள் குழு தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறது. இந்த இளைஞர்கள் வேறு யாருமல்ல; ஏற்கெனவே இவர்களுக்கு அஜித் பயிற்சி அளித்துள்ளார். இவரது தலைமையில் பயிற்சி மேற்கொண்ட ‘டீம் தக்க்ஷா’ தான் இப்போது இந்தச் சேவையை செய்து வருகிறது. நடிகர் அஜித் பயிற்சியளித்த ‘டீம் தக்க்ஷா’ தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யுஏவி சவால்களில் பங்கேற்று, கடந்த காலங்களில் பல விருதுகளை வென்றுள்ளது.
இதனிடையே, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு உள்ளிட்ட மற்ற எல்லா படப்பிடிப்புகளும் கொரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM