Area 51: மர்ம பகுதியில் தென்பட்ட கறுப்பு கோபுரம் – Google மேப்பில் விசித்திரமாக தெரிந்தது என்ன?

பல ஆண்டுகளாக மர்மம் நீடித்துவரும் ஒரு பகுதியாக இருப்பதுதான் ஏரியா 51.. தெற்கு நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸிலிருந்து வடமேற்கே சுமார் 120 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க ராணுவ தளமாகும்.

இந்தப் பகுதி நீண்ட ஆண்டுகளாக மர்மம் ஆகவே உள்ளது. கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டருக்கு நீளும் இந்த நெடுஞ்சாலை பாதையில் எந்த ஒரு கடைகளோ, பெட்ரோல் பங்கோ அல்லது வாகனங்கள் நிறுத்துவதற்கோ எந்த ஒரு இடமும் இல்லை.

சங்கிலிகளால் சுற்றி வளைத்து மூடப்பட்டிருக்கும் இந்த இடத்திற்குள் யாருமே உள்ளே நுழைய முடியாது. சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாது வான்வெளி பரப்பிலும் அனுமதி கிடையாது. விமானம் கூட இந்த பகுதிக்கு மேல் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Area 51

ஒரு பறவையின் நிழல் தெரிந்தால் கூட அங்கு இருக்கும் கேமராக்களில் அலர்ட் செய்யப்படுகிறது.

இந்த ஏரியா 51 லிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு முன்பே பொதுமக்கள் நடமாட்டம் நிறுத்தப்படுகிறது. அதைத் தாண்டி எந்த ஒரு வாகனமும் வர முடியாது. அப்படி அந்த பகுதியில் என்னதான் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது.

அத்துமீறி இந்த பகுதிக்குள் நுழைபவர்கள் கேள்வி இன்றி கைது செய்யப்படுகிறார்கள். 1955 களில் உளவு விமான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரியா 51 தற்போது பல அதிநவீன விமானங்களையும், போர் ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ராணுவம் இந்த இடத்தை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் அங்கு என்னதான் நடக்கிறது என்பது அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே வெளிச்சம்!

இப்படி மர்மமாக இருக்கும் ஏரியா 51 இல் ஒரு விசித்திர காட்சி தென்பட்டுள்ளது.

கூகுள் மேப்பில் ஏரியா 51 இல் ஒரு கறுப்பு முக்கோண கோபுரம் இருப்பது போல் தெரிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில், வைரலாகி வருகிறது. இந்த கோபுரம் என்னவாக இருக்கும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது? அந்த கோபுரம் போன்ற அமைப்பு ஒரு விமானத்தை காட்சிப்படுத்துகிறதா அல்லது போலியானதா? என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.