பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள ரவுடி வரிச்சியூர் செல்வம் கோவைப்பகுதியில் குற்றச் செயலில் ஈடுபட்டதாகவும், சுட்டு பிடிக்க காவல்துறையினர் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகிய நிலையில், மதுரையில் திடீரென்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய வரிச்சியூர் செல்வம், “நான் வெளியே எங்கும் செல்வதில்லை, போலீசுக்கு கட்டுப்பட்டு பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன், இது தவறான செய்தியாக உள்ளது.

நான் திருந்தி, கல்யாணம், கச்சேரிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது, இந்த செய்தியால் அங்கு செல்ல முடியாமல் போய்விட்டது. ஒரு வருடத்தில் மட்டும் 15 திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். எந்த பிரச்னைக்கும் நான் செல்வதில்லை. நான் கோயம்புத்தூர் சென்று 13 வருடம் ஆகிறது. அங்கு உள்ளவர்களிடமும் எந்த தொடர்பிலும் இல்லை. அங்குள்ள நண்பரிடம் மொபைலில் பேசுவேன், அமைதியாக இருந்தாலும் எதற்காக என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என தெரியவில்லை.
ஆண்டவன் புண்ணியத்தில் என் தந்தை சம்பாதித்து வைத்த சொத்து உள்ளது. நான் எதற்கு எங்கும் செல்ல தேவையில்லை.” என்றவர்,
தற்போது நடைபெறும் என்கவுண்டர்கள் குறித்த கேள்விக்கு, “சேட்டை பண்ணினால் சுடத்தான் செய்வார்கள். காவல்துறையினர் நடத்தும் என்கவுண்டர்களை ஆதரித்துதான் ஆக வேண்டும். 10 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் காவல் துறையினர்தான் உள்ளனர். இவர்கள் செய்யும் சேட்டைக்கு போலீஸ் சுடத்தான் செய்வார்கள். நல்லவர்களை சுட்டால் போலீசை குறை சொல்லலாம், ஆனால் சுடப்பட்டடவர்கள் எல்லாம் ரௌடி, காவாளிகள். நானெல்லாம் திருந்தி எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று இருக்கிறேன்.

இப்போது நான் எங்கு சென்றாலும் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டுதான் போகிறேன். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக கடைசியாக என் மீது ஒரு சின்ன வழக்கு 2018-ல் மதுரையில் பதிவு செய்யப்பட்டது.
என் மீது ஏழு வருஷத்துக்கு முந்தைய வழக்குகள்தான் உள்ளது. என் மீது உள்ள ஏழு வழக்குகளில் இரண்டு கொலை வழக்கு, மற்றவை அடிதடி வழக்குகள்தான். தற்போது என் மீது எந்த வழக்குகளும் இல்லை, எந்த பிரச்னைக்கும் செல்வதில்லை அதற்கு வேலையும் இல்லை. வீட்டை சுற்றி கேமரா உள்ளது. என்னை காவல்துறையினர் கண்காணிக்கிறார்கள். வரிச்சியூர் செல்வம் இப்படி இருக்கிறாரே என கண்படுகிறார்கள். நான் இப்படி இருப்பதே சிலருக்கு பொறாமையாக இருக்கிறது.
கோயம்புத்தூரிலிருந்து எந்த காவல்துறையினரும் என்னிடம் பேசவில்லை. மதுரையில் உள்ளவர்களிடமிருந்துதான் இது போன்ற செய்தி வருகிறது.
இப்போதுள்ள காவல் துறையினர் தப்பு செய்தால் விடுவதில்லை, காலை உடைப்பார்கள், இல்லையென்றால் காலில் சுட்டு பிடிப்பார்கள். மனிதர்களாக இருந்தால் சரி, மிருகமாக இருந்தால் என்கவுண்டர் செய்யத்தான் வேண்டும். நான் செய்ததும் தவறுதான், போலீஸ் என் மீது பொய் வழக்கு போடவில்லை, நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில தெரிவிப்பேன்.
இன்ஸ்டாகிராம் மூலம் ரவுடிகள் உருவாகினால் ஜெயிலுக்குள்தான் இருக்க வேண்டும். கை கால் உடைபடும், ஒழுங்காக படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை சுட்டு பிடிக்க உத்தரவு என்ற இது போன்ற செய்திகளை உறுதி செய்து விட்டு வெளியிடுங்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னிடம் ஆயுதத்திற்கு வேலையே கிடையாது, 15 நாளைக்கு ஒருமுறை என் வீட்டிற்கு வந்து காவல்துறையினர் முழுவதுமாக சோதனை செய்துவிட்டு போகிறார்கள்.
எனக்கு இதற்கு மேல் நகை மீது விருப்பமில்லை, இதற்கு மேல் நகை போட்டால் என்னால் பாதுகாக்க முடியாது வரிச்சியூர் செல்வம் என்று அடையாளத்தோடு இருந்து விடுகிறேன். என்னை பார்த்து ஏராளமானோர் நகை அணிய தொடங்கியதன் மூலம் நகை கடைகளுக்கு நல்ல வியாபாரம் நடப்பது மகிழ்ச்சிதான்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
