Waqf Bill: “3 பேர் மரணம், 150 பேர் கைது” – மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தினால் மேற்கு வங்கம் மாநிலத்தில் கலவரம் எழுந்துள்ளது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் எழுந்த கலவரத்தில் 3 பேர் மரணமடைந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் சொத்துக்களான வக்ஃப் வாரிய சொத்துகளை நிர்வகிப்பதில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

முர்ஷிதாபாத் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சுடி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பெரிய கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் கூறியதென்ன?

கொல்கத்தா உயர் நீதி மன்றம் நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய படையினரைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.

நிலைமை கடுமையானதாகவும், கொந்தளிப்பாகவும் இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், மக்கள் ஆபத்தில் இருக்கும்போது நீதிமன்றங்கள் அமைதியாக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ளார் மேற்கு வங்க ஆளுநர் சி.வி ஆனந்த்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

“பாஜகதான் காரணம்” – முதலமைச்சர் மம்தா

முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கலவரத்துக்கு பின்னால் இருப்பவர்கள் சமூகத்துக்கு தீங்கு விளைப்பதாக சாடியுள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய (Waqf) சட்டத்தைக் கொண்டுவந்து கலவரத்துக்கு வித்திட்டது பாஜகதான் என்றும், தனது கட்சி வக்ஃப் சட்டதிருத்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபெறக் கூறியுள்ளார்.

“இந்துக்கள் வேட்டையாடப்படுகின்றனர்” – எதிர்க்கட்சி தலைவர்

மேற்குவங்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, 400 இந்துக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“மேற்கு வங்கத்தில் உண்மையாகவே மத துன்புறுத்தல் இருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் (இஸ்லாமியர்களை) திருப்திபடுத்தும் அரசியல் தீவிரவாத சக்திகளுக்கு தைரியம் அளித்துள்ளது.

இந்துக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நம் மக்கள் சொந்த நிலத்தில் உயிருக்கு அஞ்சி ஓடும் நிலை உள்ளது.” எனப் பேசியுள்ளார் சுவேந்து அதிகாரி.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி (பாஜக)

கொல்கத்தா உள்பட மேற்கு வங்கத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும், இஸ்லாமியர்கள் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் முர்ஷிதாபாத் பகுதியில் காவல்துறையினர் மீது கல்வீச்சு மற்றும் காவல்துறை வாகன எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார், மாநில அரசு ‘காவல்துறையினர் எந்த குண்டர்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டாம்; என்று அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக, வக்ஃப் சட்ட திருத்தம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள கலவரங்கள் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க தயாராகிவரும் மம்தா பானர்ஜிக்கு பெரும் சோதனையாக எழுந்துள்ளன.