`கல்விக்கூடங்களில் கம்பர்’ பேச்சுப் போட்டி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கல்லூரி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில் ஆளுநரின் செயல்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் சில நாள்கள் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார்.
“கல்விக்கூடங்களில் கம்பர்” என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் ஹரி தியாகராஜன், எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், விஐடி பல்கலைக்கழக இணைவேந்தர் செல்வம், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்ய் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசும்போது, “கம்பராமாயணம் தமிழர்களின அடையாளம், தமிழ் இலக்கிய பண்பாட்டின் பிரதிபலிப்பு. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காவியம். பெண்களை எப்படி கண்ணியமாக போற்றப்பட வேண்டும் என கம்பன் கூறியதை பார்த்தோம்.

அமைச்சர் பேச்சு குறித்து
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஒருவர் பெண்களை தரக்குறைவாக கீழ்த்தரமாகவும் விமர்சித்திருந்தார். அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அப்படிப்பட்டவரை கனவான் என்று அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன்.
சிவன், விஷ்ணுவை வணங்குபவர்களின் நம்பிக்கையை, பக்தி உணர்வை காலில் போட்டு மிதித்திருக்கிறார். பல்லாயிரம் ஆண்டு ஆன்மிக மரபை சேதப்படுத்தியுள்ளனர். அமைச்சரின் ஆபாச பேச்சு மூலம் தமிழகத்தில் கலாசாரப் படுகொலைகள் நடந்து வருகின்றன.
அந்த அமைப்பினரால் நமது தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவுடன் ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்கள் நடக்கிறது.
தற்போது புதிய அடையாளங்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியுமென இருக்கக் கூடாது. பல்லாண்டுகளுக்கு முன் நம் ஆலயங்களை அழிக்க முற்பட்டபோது நம் முன்னோர்கள் எதிர்த்து போராடினார்கள். இதை நாம் கற்றுக்கொண்டு பள்ளிகளிருந்தே தொடஙகி ஒரு இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.
இதுவே நாம் கம்பனுக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்” என்று பேசியவர், உரையை முடிக்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர், மாணவர்களையும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்த்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்? பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ.” என்று பதிவிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
