பாட்டி, பேரன் கொடூரமாக அடித்துக் கொலை; ஈரோட்டில் பகீர்.. போலீஸார் விசாரணை

ஈரோடு மாவட்டம், தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பா இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவரது மகன் ராகவன்(11), மகள் அமிர்தா(9).

ராகவன் சூசைபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை இரவு, ராகவன் பக்கத்தில் உள்ள அவரது பாட்டி சிக்கம்மா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தனது அண்ணன் வீட்டுக்கு வராதததால், ராகவனைக் காண தங்கை அமிர்தா பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் உள்ளே சென்று பாத்தபோது, ராகவன் மற்றும் பாட்டி சிக்கம்மா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

ராகவன்

அமிர்தா கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, ராகவன் மற்றும் பாட்டி சிக்கம்மா இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தாளவாடி போலீஸார் இருவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், “பாட்டி சிக்கம்மாவும், பேரன் ராகவனும் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கி உள்ளனர். இரவு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தலையில் அவர்களை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். நகை மற்றும் பணத்துக்காக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதா அல்லது குடும்ப விவகாரம் காரணமாக கொலை நடந்துள்ளதாக என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.