ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜகபிந் நாயக். இவரது மனைவி பத்மினி நாயக். இவர்கள் இருவரும் திருப்பூர் ஓடக்காடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது மூன்று வயது ஆண் குழந்தை அம்ரித். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜகபிந் நாயக் தனது மனைவி மற்றும் குழந்தை அம்ரித்துடன் ஒடிசாவுக்குச் சென்றுள்ளார். அங்கு, சிறுவன் அம்ரித்தை தெரு நாய் கடித்துள்ளது. அப்போது, சிறுவனுக்கு முறையாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல், நாட்டு வைத்தியம் பார்த்துவிட்டு திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அப்போதும், நாட்டு மருந்துகளை சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிறுவன் அம்ரித் பேச்சு மூச்சின்றி இருந்ததை கண்ட பெற்றோர் சிறுவனை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து, சிறுவன் அம்ரித்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீஸார், நாய் கடித்ததில் முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தால் சிறுவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதாவது காரணத்தால் சிறுவன் உயிர் இழந்தானா? என்று பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
