2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகளை திட்டமிட்டு மத்திய பாஜக தமிழ்நாட்டு அரசியலில் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. இதில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அடிபட அண்ணாமலை பதவி குறித்த பேச்சும் எழுந்தது. பின்னர் மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்தார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
குமரி, திருநெல்வேலிக்கு இடையே கன்னியாகுமரி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH 44) இருக்கும் பணகுடி கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் நயினார். இளங்கலை, முதுகலை படிப்பை திருநெல்வேலி மதிதா இந்து கல்லூரி மற்றும் நாகர்கோவில் கல்லூரியில் படித்தவர். இவரது குடும்பம் நாகர்கோவில் சுற்றிய பகுதிகளில் தொழில்கள் செய்யும் செல்வாக்கான பண்ணையார் குடும்பம். நயினாரும் சொந்தத் தொழில்களை பார்த்துக்கொண்டு தொழிலதிபராக வலம் வருபவர்.

செல்வத்தில் நல்ல செல்வாக்கு இருக்க, அரசியல் செல்வாக்கை குறி வைத்து தனது 29வது வயதில் 1989ம் ஆண்டு ‘அதிமுக’வில் தொண்டகாக இணைந்து பணகுடியின் நகர செயலாளராகப் பொறுப்பேற்றார். அப்போது 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் காலமான பிறகு, ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது.
எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு திருநெல்வேலி தொகுதி அதிமுகவின் கையைவிட்டுப் போக, திருநெல்வேலியில் திமுக தடம் பதிக்க தொடங்கியது. திருநெல்வேலியைக் கைப்பற்றினால் தெற்கில் ஆதிக்கம் செலுத்திவிடலாம் எனக் தீவிரமாகக் கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் திருநெல்வேலி அதிமுக எம்.எல்.ஏ சீட்டைக் குறி வைத்து தீவிரமாக கட்சிப் பணி செய்துகொண்டிருந்தார் நயினார்.
திருநெல்வேலியைக் கைப்பற்றும் வியூகமாக 1998ஆம் ஆண்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெள்ளி விழா மாநாடு திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. அதில் தீவிரமாக இறங்கி முன்களத்தில் வேலைபார்த்தார் நயினார்.
அதன் பலனாக 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலியின் அதிமுக எம்.எல்.ஏ வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு நயினாருக்கு வழங்கப்பட்டது. ஜெயலலிதா நம்பிக்கையைக் காப்பாற்றி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று திருநெல்வேலியைக் கைப்பற்றினார். 1996 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுகவும் 2001ம் ஆண்டு வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. இதுதான் நயினாரின் அரசியலில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது
போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிபெற்று அமைச்சர் அவையில் இடம்பெற்றார். அந்த 2001 – 2006 ஆட்சி காலத்தில் தொழில்துறை, மின்சாரம், போக்குவரத்து என மூன்று துறைகளுக்கு அடுத்தடுத்து மாற்றப்பட்டு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். ஜெயலலிதா பேரவையில் மாநில செயலாளரகாவும் பொறுப்பு வகித்தார் நயினார்.

ஆனால், அதன்பிறகு 2006 தேர்தலில் அதிமுக தோல்வியடைய, நயினாரும் நெல்லையில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 தேர்தலில் அதிமுக வெற்று ஆட்சி அமைக்க, நயினாரும் நெல்லையில் வெற்றிபெற்றார். அதிமுக கட்சி விஜயகாந்தின் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்களுடன் கூட்டணியில் வைத்த தேர்தல் அது. அதைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு அதிமுக மீண்டு ஆட்சியமைக்க, நயினார் நெல்லையில் தோற்றார்.
டிசம்பர் 5, 2016 ஜெயலலிதா காலமாக, ஒன்றாக இருந்த அதிமுக, ஓபிஎஸ் – இபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு அணிக்கும் தாவிக்கொண்டிருந்தனர். ஆனால், நயினார் இரண்டையும் விட்டுவிட்டு பாஜகவிற்கு தாவிவிட்டார். 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி கிடைத்தது.
பாஜகவிற்குச் சென்றபிறகு இந்துத்துவாவில் தீவிரமான நயினார், “ஆண்டாள் பற்றி தவறாக பேசிய கவிஞர் வைரமுத்துவின் நாவை அறுத்தால் ரூ.10 கோடி வழங்குகிறேன்” என்றெல்லாம் சர்ச்சைகளைக் கிளப்பினார்.
2021 சட்டமன்ற தேர்தலையொட்டி 2020ம் ஆண்டு எல். முருகன் பாஜக மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்போதே பாஜக மாநில தலைவருக்கான ரேஸில் நயினார் பெயரும் அடிபட்டது. அப்போது அதிமுக – பாஜக கூட்டணி வேறு அமைந்திருந்தது. ஆனால், பாஜகவில் சேர்ந்த உடனே தலைவர் பதவியை எதிர்ப்பார்க்கக் கூடாது என அமைதியாக்கிவிட்டனர். அதன்பிறகு அதிமுக – பாஜக கூட்டணியின் தோல்விக்குப் பிறகு 2021ம் ஆண்டே அண்ணாமலை பாஜக மாநில தலைவரானார். பாஜகவில் இணைந்த ஒரே ஆண்டில் அண்ணாமலைக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்தாலும், நயினார் நெல்லையில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் நுழைந்தார். இதற்கிடையில் மத்திய அமைச்சர் பதவிக்கும் வலைவீசினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அது தோல்வியில் முடிந்தது.
அந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடியாக சோதனையில் சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் கோடிக்கணக்கான பணம் கடத்தப்படுவதாக தகவல் அறிந்து, சோதனையில் 4 கோடி ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் நயினார் பெயரும் அடிப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போது 2026 சட்டமன்ற தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகளை திட்டமிட்டு மத்திய பாஜக தமிழ்நாட்டு அரசியலில் காய்களை நகர்த்தி வருகிறது. இதில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அடிபட, அண்ணாமலைக்கு மீண்டும் மாநில தலைவர் பதவி கிடைக்காது என்றனர். இதையடுத்து நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பாஜக – அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் தலைமை வகிக்கிறார்.
அதிமுக கொங்குப் பகுதியில் பலமாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. அதிமுக கூட்டணியில் கொங்குப் பகுதியின் வாக்குகளைப் பெற்றுவிடலாம். தெற்கே முக்குலத்தோரின் வாக்குகளை நயினார் நகேந்திரனை வைத்து பெற்றுவிடாலம் என்ற கணக்கில் இந்த பாஜக மாநில தலைவர் மாற்றமும், அதிமுக கூட்டணியும் நடத்திருப்பதாக கமலாலயத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
பாஜகவின் இந்தத் தேர்தல் வியூகங்கள் எந்த அளவிற்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்தக் கூட்டணிக் கணக்குகள் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.!