வக்ஃபு சட்டம் : `நீதிக்கு துணை நிற்கிறீர்கள்..!’ – ஸ்டாலினுக்கு மெகபூபா முஃப்தி நன்றிக் கடிதம்

கடந்த வாரம், இந்தியாவில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் நாடாளுமன்றம் வாக்களிப்பு, ஜனாதிபதி ஒப்புதல் ஆகிவற்றை பெற்று அமலுக்கு வந்தது.

ஆனால், இந்த சட்டத்துக்கு இந்தியாவில் சில மாநிலங்கள் எதிர்ப்புக்குரல் தெரிவித்தது. அந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

இதற்கு நன்றி தெரிவித்து காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மெகபூபா முஃப்தியின் நன்றி
மெகபூபா முஃப்தியின் நன்றி

அதில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த பத்தாண்டுகளாக, இந்தியாவில் பெரும்பான்மை என்கிற அலை எழுந்து இந்தியாவின் முக்கிய மதிப்புகளான வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை அச்சுறுத்தி வருகிறது.

இதை பெரும்பாலான குடிமக்கள் எதிர்த்து வருகிறார்கள். இருந்தாலும், வெறுப்புணர்வையும், பிரிவினையையும் பரப்பும் சக்தி தற்போது ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் நமது அரசியலமைப்பு சட்டத்தை குறி வைக்கிறார்கள்.

சிறும்பான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள் இவர்களால் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளனர். சமீபத்தில் புதிய வக்ஃபு சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் முஸ்லீம்கள் தங்களது மத சுதந்திரத்தை இழந்துள்ளனர்.

இதற்கு முன்பும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது நடந்தது.

இந்தக் கடினமான சூழலில் உங்களுடைய தைரியமும், உறுதியும் எங்களுக்கு அரிய நம்பிக்கையாக இருக்கிறது. நீங்கள் நீதி மற்றும் இந்தியாவின் ஒற்றுமை ஆகியவற்றிற்கு துணையாக நிற்கிறீர்கள்.

நான் இந்த கடிதத்தை ஆழ்ந்த மரியாதை நிமித்தமாகவும், குரலற்றவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் சார்ப்பில் நன்றி தெரிவித்தும் எழுதுகிறேன். உங்களுடைய இடைவிடாத ஆதரவு மற்றும் தலைமையில் நமது அரசியலமைப்பையும், எதிர்காலத்தையும் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.