Gold Rate 2025: மூன்றரை மாதங்களில் பவுனுக்கு ரூ.12,900 உயர்வு… தங்கம் விலை கடந்து வந்த பாதை!

ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் இந்திய குடும்பங்கள் இல்லை என்று கூறலாம். இந்திய குடும்பங்களுக்கு தங்கம் அவ்வளவு முக்கியம்.

கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிட்டாலே, முதலில் நமக்கு தோன்றுவது ‘தங்கம் வாங்கிவிடலாம்’ என்பது தான். ஆனால், இப்போது தங்கம் விற்கும் விலைக்கு நடுத்தர குடும்பங்களால் தங்கத்தை பவுன் கணக்கில் அல்ல, கிராம் கணக்கில் கூட நினைத்து பார்க்க முடியாது போல.

அந்த அளவிற்கு, ஜெட் வேகத்தையும் தாண்டி தங்கம் விலை உயர்ந்துகொண்டிருக்கிறது.

2025-ம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட மூன்றரை மாதங்கள் தான் ஆகிறது. ஆனால், இந்த மூன்று மாதங்களிலேயே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அது எவ்வளவு என்று பார்க்கலாம். வாங்க…

ஜனவரி மாதத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது?
ஜனவரி மாதத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது?

ஜனவரி மாதத்தில் மட்டும்…

2025-ம் ஆண்டில் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் தங்கம் விற்பனை ஆனது.

அடுத்த இரண்டு நாட்களிலேயே தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,260 ஆகவும், பவுனுக்கு ரூ.58,080 விற்பனை ஆனது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.880 உயர்ந்து அப்போதைய புதிய உச்சத்தை தொட்டிருந்தது.

அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் விலை ஏறி ஜனவரி 16-ம் தேதி கிராமுக்கு ரூ.7,390 ஆகவும், பவுனுக்கு ரூ.59,120 ஆகவும் விற்பனை ஆனது. அடுத்து ஐந்து நாட்களிலேயே (ஜனவரி 22) பவுனுக்கு விலை ரூ.60,000-த்தை தாண்டியது.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளான 31-ம் தேதியும் அப்போதைய புதிய உச்சத்தை தொட்டிருந்தது. அதாவது கிராமுக்கு ரூ.7,730 ஆகவும், பவுனுக்கு ரூ.61,840 ஆகவும் விற்பனை ஆனது. அன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.960 உயர்ந்திருந்தது.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் நான்கு முறை புதிய உச்சத்தை தொட்டிருந்தது தங்கம். ஜனவரி மாதம் மட்டும் பவுனுக்கு ரூ.4,640. உயர்ந்திருந்தது.

பிப்ரவரி மாதத்தில்...
பிப்ரவரி மாதத்தில்…

பிப்ரவரி மாதம் எப்படி இருந்தது?

பிப்ரவரி முதல் நாள் மத்திய பட்ஜெட் நாள். அதனால், தங்கம் விலை மதியம் புதிய உச்சத்தை தொட்டிருந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,790 ஆகவும், பவுனுக்கு ரூ.62,320 ஆகவும் விற்பனை ஆனது.

பிப்ரவரி ஐந்தாம் தேதி அடுத்த உச்சத்தை கண்டது. அன்று கிராமுக்கு ரூ.7,905 ஆகவும், பவுனுக்கு ரூ.63,240 ஆகவும் உயர்ந்தது.

அதற்கு அடுத்த வாரமே, பிப்ரவரி 11-ம் தேதி கிராமுக்கு ரூ.8,060 ஆகவும், பவுனுக்கு ரூ.64,480 ஆகவும் விற்பனை ஆனது.

2025-ம் ஆண்டின் ஜனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களை ஒப்பிடும்போது தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் அவ்வளவாக ஏறவில்லை. பவுனுக்கு வெறும் ரூ.2,160 மட்டுமே உயர்ந்திருந்தது. இது ‘வெறுமா?’ என்று யோசிக்காதீர்கள். மற்ற மாதங்களின் விலையை ஒப்பிடும்போது, இது ‘வெறும்’ தான்.

மார்ச் மாதத்தின் உச்சங்கள்!

தங்கம் மார்ச் மாதத்தின் முதல் பாதியில் பெரிய விலை மாற்றத்தை சந்திக்கவில்லை. மார்ச் 14-ம் தேதி கிராமுக்கு ரூ.8,230-க்கும், பவுனுக்கு ரூ.65,840-க்கும் விற்பனை ஆனது. அதே நாளிலேயே இன்னொரு உச்சத்தையும் சந்தித்தது. அன்று மாலை கிராமுக்கு ரூ.8,300 ஆகவும், பவுனுக்கு ரூ.66,400 ஆகவும் விற்பனை ஆனது.

அந்த மாதத்தின் கடைசி நாள் கிராமுக்கு ரூ.8,425 ஆகவும், பவுனுக்கு ரூ.67,400 ஆகவும் விற்பனை ஆனது.

ஆக, மார்ச் மாதம் தங்கம் பவுனுக்கு ரூ.3,880 உயர்ந்து விற்பனை ஆகி உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மூன்றே நாட்களில்...
ஏப்ரல் மாதத்தில் மூன்றே நாட்களில்…

ஏப்ரல் மாதத்தின் அதிர்ச்சிகள்!

ஏப்ரல் முதல் நாளே உச்சத்தில் தான் தொடங்கியது. ஏப்ரல் 1-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.8,510 ஆகவும், பவுனுக்கு ரூ.68,080-க்கு விற்பனை ஆனது.

ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தப் பிறகு, அதுவரை பவுனுக்கு ரூ.68,080-ஐ தொட்டிருந்த தங்கம் விலை, ஏப்ரல் 3-ம் தேதியில் இருந்து மார்ச் 8-ம் தேதி வரை வெகுவாக குறைந்த கிராமுக்கு ரூ.8,225 வரையும், பவுனுக்கு ரூ.65,800 வரையும் சென்றது.

இப்படியே குறைந்தால் நல்லா இருக்கும்… இன்னமும் குறையும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில் 9-ம் தேதியில் இருந்து மீண்டும் உயர தொடங்கியது.

ஏப்ரல் 10-ம் தேதி கிராமுக்கு ரூ.8,560 ஆகவும், பவுனுக்கு ரூ.68,480 ஆகவும் விற்பனை ஆனது.

ஏப்ரல் 11-ம் தேதி கிராமுக்கு ரூ.8,745 ஆகவும், பவுனுக்கு ரூ.69,960 ஆகவும் விற்பனை ஆனது.

இன்று கிராமுக்கு ரூ.8,770 ஆகவும், பவுனுக்கு ரூ.70,160 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.1,680 உயர்ந்துள்ளது. மேலும், தங்கம் வரலாற்றில் அதன் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

போன வருசம் vs இந்த வருசம்
போன வருசம் vs இந்த வருசம்

2024 vs 2025

2024-ம் ஆண்டு முழுவதும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.12,000 தான் மொத்தமுமாக உயர்ந்திருந்தது.

ஆனால், 2025-ம் ஆண்டு தொடங்கிய மூன்றரை மாதங்களிலேயே தங்கம் விலை பவுனுக்கு ரூ.12,900 உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட ரூ.13,000 ஆகும்.

தங்கம் விலை இன்னமும் உயரும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

2025-ம் ஆண்டில் இன்னும் எவ்வளவு விலை உயரப்போகிறது, எத்தனை உச்சங்களை தொடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.