ADMK – BJP: அமித் ஷாவின் அறிவிப்புக்குப் பின்… எடப்பாடி சொன்ன கூட்டணி கருத்து!

பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்பமனு தாக்கல் செய்த சில நிமிடங்களில், “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும்” என்று அறிவித்தார் அமித் ஷா. இந்தச் செய்தியாளர் சந்திப்பில், அமித் ஷாவுக்கு இடது பக்கத்தில் அண்ணாமலையும், வலது பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர், அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தேனீர் விருந்துக்குச் சென்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியை அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு முதல்முறையாகக் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறந்திருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, “2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் இணையும் என்று இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பெருமையை அமித் ஷாவும், நானும் பெற்றுள்ளோம். தி.மு.க-வின் பிற்போக்குத்தனமான தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்கவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்யவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகள் கொண்ட புதிய சகாப்தத்திற்கு அடித்தளமிடவும் இந்த கூட்டணி உறுதியுடன் உள்ளது.

பிரகாசமான, வலிமையான, ஆற்றல்மிக்க தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தொலைநோக்கு மற்றும் உறுதியான தீர்மானத்துடன் நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மறுபக்கம், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்து வருகின்றனர்.