மதுரை: “சூடான தர்பூசணி பரோட்டா, கோடையில் சாப்பிட்டு பாருங்க..” – ஹோட்டல் உரிமையாளர் சொல்வதென்ன?

அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும், தொன்மைக்கும், கலைகளுக்கும் மட்டுமல்ல, விதவிதமான உணவுகளுக்கும் மதுரை பிரபலமானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தர்பூசணி பரோட்டா

கோயிலுக்கும், திருவிழாக்களுக்கும் சங்ககால வரலாற்றை அறியவும் மதுரைக்கு சுற்றுலா வருகின்ற மக்கள் ஒருபக்கமென்றால், கறிதோசை, முட்டைக்கறி, வெங்காயக்கறி, எலும்பு ரோஸ்ட், அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா, பட்டர் பன், பால் பன், தேங்காய் போலி, நெய்ப்பணியாரம், மிளகுச்சேவு, கடலை பக்கோடா, முள்ளு முருங்கை வடை, பருத்திப்பால், கலவை சாதங்கள் என தனித்துவமான சுவைகொண்ட உணவுக்காகவும் மக்கள் மதுரைக்கு சுற்றுலா வருகிறார்கள். அந்தளவுக்கு சைவ, அசைவ பாரம்பரிய உணவுகளுக்கும், பலகாரங்கள், பானங்களுக்கும் புகழ்பெற்றது மதுரை.

இந்த வரிசையில் மதுரையில் பிரபலமான டெம்பிள் சிட்டி உணவக நிறுவத்தினர் தர்பூசணி பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளனர்.

தர்பூசணி பரோட்டா

ஒவ்வொரு காலகடத்திலும் மக்கள் மத்தியில் டிரெண்டாகும் விஷயங்களை வைத்து அதைத் தொடர்புபடுத்தி புதுவகையான உணவுகளை உருவாக்கி வரும இவர்கள், தற்போது தர்பூசணியில் பரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

டெம்பிள் சிட்டி குமார்

தர்பூசணியில் பரோட்டாவா? எப்படி என்று எல்லோரும் ஆச்சரியப்பட, இதுகுறித்து டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் கூறும்போது, “கோடை காலத்தில் மட்டும்தான் தர்பூசணி விற்பனை அதிகமாக நடக்கும். சமீபத்தில் ஏற்பட்ட சில பிரச்னையினால் தர்பூசணி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தர்ப்பூசணியை விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தர்பூசணியை பிரபலபடுத்தும் வகையில் பரோட்டாவுக்கு பிரபலமான மதுரையில் இந்த தர்பூசணி பரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளோம். இப்போது சோதனை முயற்சியாக செய்துள்ளோம். உணவுப்பிரியர்கள் விரும்பிக் கேட்டால் தயாரித்து கொடுப்போம்” என்றார்.

மதுரையன்ஸ் பரோட்டாவை வைத்து இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறாங்களோ?