சீனாவின் ‘எதிர்த்து நில்’ Attitude; அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் ஸ்கெட்ச் என்ன?

ஏப்ரல் 2-ம் தேதி உலக நாடுகளுக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் ‘பரஸ்பர வரி’ விதித்து அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்.

இரண்டு நாட்களுக்கு முன்பு (ஏப்ரல் 9), அந்த வரி விதிப்பை ’90 நாள்களுக்கு பிறகு’ என்று ஒத்திவைத்து கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், இந்த வரி விலக்கு சீனாவுக்கு மட்டும் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

‘சீனாவுக்கு மட்டும்தான் வரி’ என்று எளிதாக இந்த விஷயத்தை நாம் கடந்துவிட முடியாது. காரணம், உலகப் பொருளாதாரத்தில் சீனா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் உலக சந்தைகளின் முக்கிய உற்பத்தியாளரும்கூட.

ரெஜி தாமஸ், 
பங்குச்சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ்,
பங்குச்சந்தை நிபுணர்

இது சந்தையை எப்படி பாதிக்கும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“ட்ரம்ப்போட பிரச்னை பிற நாடுகள் அல்ல, சீனா தான்.

இதுவரை அமெரிக்காவிடம் இருந்த உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற இடத்தை சீனா தட்டிப் பறித்ததே ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம். அவர் மீண்டும் அந்த இடத்தைப் பிடிக்க போராடுகிறார்.

சீனாவின் நிலைமை தற்போது எப்படி இருக்கிறது?

சீனாவின் பொருளாதாரம் எப்போதும் போல தான் இருக்கிறது. இந்த வரி விதிப்பால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதுபோல தெரியவில்லை. இது தற்போது கிடைத்துள்ள… சீனா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கூறப்படுவது ஆகும்.

ஏனெனில், சீனாவில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் வளர்ச்சி வெளியே தெரியாது. சீன அரசு அந்தத் தகவல்களை மிக மிக பாதுகாப்பாக வைத்துள்ளது. அவர்கள் சொல்வதை தான் நாம் கேட்டுக்கொள்ள முடியும்.

ட்ரம்ப், ஜின்பிங்: அடுத்து என்ன?
ட்ரம்ப், ஜின்பிங்: அடுத்து என்ன?

சீனாவின் உத்தரவு

இன்னொரு பக்கம், சீனா அதன் மக்களுக்கு ‘தகுந்த காரணம் இல்லாமல் அமெரிக்காவிற்கு செல்லாதீர்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது, சுற்றுலா செல்லும் நாட்டிற்கு அதன் மூலம் வருவாய் கிடைக்கும். மேலும், அந்த நாட்டின் அந்நிய செலவாணி கூடும். சுற்றுலா செல்பவர் அங்கே தங்குவது, சுற்றி பார்ப்பது, பொருள்களை வாங்குவது போன்றவற்றால் அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட நன்மை கிடைக்கும்.

இதை ஓரளவு தடுக்கும் நோக்கில் தான் சீனா இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.

சீனாவின் பேச்சுவார்த்தை

சீனா இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்த வரி விதிப்பிற்கு எதிராக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

ஆஸ்திரேலியா சீனாவிற்கு பெரிய ‘நோ’ சொல்லிவிட்டது. ஆனால், இந்தியா இன்னும் பதில் சொல்லவில்லை.

அமெரிக்கா Vs சீனா

அமெரிக்காவிற்கு எதிராக சீனா அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துவருகிறது.

இவ்வளவுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஜின்பிங் நல்லவர்… பேச்சுவார்த்தைக்கு தயார்’ என்று எவ்வளவு சமாதானம் பேசி பார்த்தும், சீனா கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க தயாராக இல்லை. சீனா அமெரிக்கா மீது விதித்து உள்ள 84 சதவிகித வரி அமலில் தான் இருக்கப்போகிறது.

அமெரிக்காவும் 145 சதவிகித வரி அறிவிப்பை குறைப்பது, ஒத்திவைப்பதுப்போல தெரியவில்லை.

பொருளாதார பட்டியலில் டாப் இடங்களை பிடித்திருக்கும் இரு நாடுகளின் இந்த வணிகப் போர் நிச்சயம் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்யும்”.

நிதி, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்.

நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்!
நாணயம் விகடன் யூடியூப் சேனலை பாருங்கள்!