BJP: மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன் – நெருங்கும் கூட்டணிக் கணக்கு

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ள நிலையில், இன்று தமிழக பா.ஜ.க வின் புதிய தலைவருக்கான விருப்ப மனு தாக்கலும் நடந்திருக்கிறது. நயினார் நாகேந்திரன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தேர்தல் கணக்கு:

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘அ.தி.மு.க’ – பா.ஜ.க கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல இருகட்சிகளின் தலைவர்களும் வார்த்தைப்போரில் ஈடுபட்டு, ஒருகட்டத்தில் அந்தக் கூட்டணி முறிந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நேரடி வார்த்தை மோதல் ஏற்பட்டன. அப்போது அண்ணாமலை, “இனி ‘அ.தி.மு.க’-வுடன் எப்போதும் கூட்டணியே கிடையாது” என்று காட்டமாகப் பேசி, எடப்பாடி பழனிசாமியை, “மாதந்தோறும் அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்து அ.தி.மு.க தலைவராக இருக்கிறார்” போன்ற பல கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அதேப்போல அதிமுக-வின் முன்னாள் தலைவர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை – அ.தி.மு.க – பா.ஜ.க

அதனால், அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் கொந்தளிப்புக்குள்ளானார்கள். ஒருகட்டத்தில், “இனி எந்த சூழலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது” என அடித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதே கருத்தை முழு அ.தி.மு.க-வும் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் ‘அ.தி.மு.க -பா.ஜ.க’ கூட்டணி இணையப்போவதாக பேச்சுகள் அடிப்பட்டன. அதை உறுதி செய்யும் வகையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அ.தி.மு.க நிர்வாகிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

இது ‘அ.தி.மு.க -பா.ஜ.க’ கூட்டணி என்ற தகவலால் அரசியல் களத்தில் சூடுபிடித்தது. அடுத்த ஒரு சில நாள்களில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் பதிவியிலிருந்து அண்ணாமலை விலகுவதாக தகவல்கள் கசிந்தன. இதுகுறித்துப் பேசிய அண்ணாமலை, “பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். அதன் பிறகு அதுகுறித்துப் பேசுகிறேன். புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை; ஒரு தொண்டனாக தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன்” என்றவர், “அடுத்து வருபவர்கள் நல்லா பண்ணுவார்கள் தலைவா.” எனத் தெரிவித்திருந்தார்.

‘அ.தி.மு.க -பா.ஜ.க’ கூட்டணிதான் இதற்குக் காரணம் என்று கமலாலயத்தில் பேச்சுகள் அடிபடத்தொடங்கியது. மேலும், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, `பா.ஜ.க-வின் தற்போதைய மாநில தலைவரை மாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்ததாகவும் அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதே நேரம் அடுத்த பா.ஜ.க மாநில தலைவர் போட்டிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என இருவரின் பெயரும் பலமாக அடிபட்டது.

இதில் நயினார் நாகேந்திரனே அடுத்த பா.ஜ.க மாநிலத் தலைவராக வருவார் என உறுதியான தகவல்கள் கசியத் தொடங்கின. அதை உறுதிப்படுத்தும் வகையில், மதுரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அண்ணமாலை கீழே இருக்க, நயினார் நாகேந்திரனுக்கு மேடையில் இடமளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் நயினார் நாகேந்திரன் 07.04.2025 இரவு திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள், அக்கட்சியினர் மத்தியில் எழும் நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பெயரில் நயினார் நாகேந்திர டெல்லிக்குச் சென்றுள்ளதாகத்  தகவல் வெளியாகியிருந்தது.

BJP

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் அமித் ஷா தலைமையில் மாநில தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கானக் கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்றிருந்து. கமலாலய வாசலை தொட்டு வணங்கி பா.ஜ.க. மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்பமனு பெற வருகை தந்திருந்த நயினார் நாகேந்திரனை உற்சாகமாக வரவேற்றிருந்தனர் பாஜக நிர்வாகிகள். இதையடுத்து பாஜக மாநில தலைவர் யார் என்ற கேள்விகள் பரபரப்பான பேசுபொருளாகியிருந்தன.

தமிழக பா.ஜ.க -வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து நயினார் நாகேந்திரனை தலைவராகப் பரிந்துரை செய்து விருப்ப மனு அளித்துள்ளனர். அதன்படி பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vikatan Whatsapp Channel