திமுக அமைச்சர்களுக்கு நேரம் சரியில்லை போலும்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசிய பொன்முடியை கட்சியின் துணைப் பொது செயலாளர் பதவியில் இருந்து தூக்கி சில மணி நேரம் தான் ஆகின்றது.
இப்போது திமுகவின் பொது செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தான் முன்பு பேசிய பேச்சிற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை சொல்வது என்ன?
அதில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீளும் பட்டியல்
2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்படி தவறாக பேசிய அமைச்சர்கள், தவறான வார்த்தைகளை பயன்படுத்திய அமைச்சர்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகின்றன.
பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மமதையில் பேசுவதையும், தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
