“பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சிப்பதவியை பறித்த திமுகத் தலைமை, மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகப் பேசிய அமைச்சர் துரைமுருகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பற்றி பேசும்போது மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைபாட்டை ஒப்பிட்டு வழக்கொழிந்த வார்த்தைகளில் பேசியிருக்கிறார். அவர் பேசியது ஊடகங்களில் வெளிவந்ததைப் பார்த்து தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கொந்தளித்துப் போனார்கள்.
“துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்யவேண்டும்” என்று வலிறுத்தி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் நாக பாஸ்கர், “தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் பதவியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு ஆணையும் வெளியிட உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஊனமுற்றோர் எல்லோரும் மாற்றுத்திறன் பெற்றவர்கள் என்று கூறி, நம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் என்ற பெயரில் அழைத்தார். அதுவே மக்கள் வழக்கில் உள்ளது. அவற்றையெல்லாம் கெடுக்கும் நோக்கோடு அமைச்சர் துரைமுருகன் செயல்படுகிறார்.
2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் குறைபாட்டை குறிப்பிட்டு பேசினால் தீண்டாமை வன்கொடுமை சட்டம் போல் தண்டனைகள் கிடைக்க வழிவகை உள்ளது. ஆகவே உடனடியாக தமிழக அரசு அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
துரைமுருகன் இதற்காக மாற்றுத் திறனாளிகள் சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும், இந்து மத நம்பிக்கைகள் குறித்தும் அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதாக வீடியோ சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு கட்சியினரும், பெண்களும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று அவர் வகித்த துணைப்பொதுச்செயலாளர் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகப் பேசியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார், “பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் அமைச்சர் பொன்முடியின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உடல் குறைபாட்டை இழிவாகப் பேசிய துரைமுருகன் மீது ஏன் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
துரைமுருகனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்பாட்டம் நடத்தி வருவது முதலமைச்சருக்கு தெரியாதா? இப்போதுதான் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது மிகத் தாமதமான வருத்தம். அதனால் அவர் மீது தி.மு.க கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொன்முடிக்கு ஒரு நீதி, துரைமுருகனுக்கு ஒரு நீதி என்று திமுக தலைமை செயல்படக்கூடாது, துரைமுருகன் பேசியதற்கு எதிராக நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடுப்போம்” என்றார்
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
