பாஜக தலைவர் ரேஸ்: நயினார் வரிசையில் இணைந்த மற்றொரு பெயர்; யார் இந்த ஆனந்தன் அய்யாசாமி?

எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித் ஷா-வை நேரில் சந்தித்த பிறகு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகிறது. அதற்கேற்றாற்போலவே, எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக அதனை மறுக்காமல் கொள்கை வேறு, கூட்டணி என்று மேலோட்டமாக பேசிவருகிறார்.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி

இருப்பினும், இந்தக் கூட்டணியில் அண்ணாமலைக்கு விருப்பமாக இல்லையென்று கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடு, டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி விவகாரத்தில் தலைமைதான் முடிவெடுக்கும் என்று தனது மீட்டரைக் குறைத்துப் பேசினார் அண்ணாமலை. எல்லாவற்றுக்கும் மேல், பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என்று வெளிப்படையாக அண்ணாமலை கூறிவிட்டார்.

ஆனந்த் அய்யாசாமி
ஆனந்த் அய்யாசாமி

மறுபக்கம், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்ததும் மாநில தலைவர் பதவிக்கான தேர்தலில் இவரின் பெயர் அடிபட்டது. அமித் ஷா சென்னைக்கு வருகை தரப்போகிறார் என்று செய்தி வெளியானதும், மாநில தலைவர் பதவிக்கான ரேஸ் பரபரப்பானது. இந்த நிலையில்தான், ஆனந்தன் அய்யாசாமி என்பவரின் பெயர் இந்த ரேஸில் இணைந்திருக்கிறது.

தென்காசி பாஜக மாவட்ட செயலாளராக இருப்பவர்தான் ஆனந்தன் அய்யாசாமி. கூடுதலாக பாஜக மாநில ஸ்டார்ட் அப் செல் பிரிவின் தலைவராகவும் இவர் செயல்பட்டுவருகிறார். அண்ணாமலை நடத்திய `என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையில் தென்காசி மாவட்ட பொறுப்பாளராகப் பணியாற்றிய ஆனந்த் அய்யாசாமி, தென்காசியில் என்.ஜி.ஓ நிறுவனங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழிசை - ஸ்ரீதர் வேம்பு - ஆனந்த் அய்யாசாமி
தமிழிசை – ஸ்ரீதர் வேம்பு – ஆனந்த் அய்யாசாமி

அதோடு, பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவுக்கு இவர் நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகள் அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தில் வேலைபார்த்த ஆனந்தன் அய்யாசாமி, தற்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழக பாஜக-வில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

நயினார் நாகேந்திரன் - ஆனந்த் அய்யாசாமி
நயினார் நாகேந்திரன் – ஆனந்த் அய்யாசாமி

2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தென்மாவட்டங்களில் மோடி பிரசாரம் மேற்கொண்டபோது கட்சித் தலைமையிடம் அதிக நெருக்கம் காட்டியிருக்கிறார். இதுபோன்ற காரணங்களால் ஆனந்தன் அய்யாசாமியின் பெயரும் பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் சேர்ந்திருக்கிறது.

நயினார் நாகேந்திரன், ஆனந்த் அய்யாசாமி ஆகியோரின் பெயர் மாநில தலைவர் பதவி ரேஸில் அடிபட்டுக்கொண்டிருந்த வெளியில்தான், மாநில துணைத் தலைவர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்ரவர்த்தியிடமிருந்த்து ஒரு அறியாகி வெளியானது. அந்த அறிக்கையில், “மூன்று பருவம் (ஒரு பருவம் என்பது 3 வருடங்கள் என்று சொல்லப்படுகிறது) தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறுவார்.

இவரைக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்றுப் பரிந்துரைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நயினார் நாகேந்திரன், ஆனந்த் அய்யாசாமி ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.