நயினாருக்கு உறுதியான மாநில பொறுப்பு… அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பா? – அறிவித்த அமித் ஷா!

பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லையென்று அண்ணாமலை கூறிய நாள்முதல், அடுத்து இவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்படும் அல்லது வழங்கப்படுமா என்பதே புதிராக இருந்தது. இத்தகைய சூழலில், கமலாலயத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலில் கடைசி நேரத்தில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதால் அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமனு தாக்கல் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை
நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

அதன்படி, மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்ய, போட்டியாக வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி மாநில தலைவராக தேர்வாகும் சூழல் உருவாகியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகக்கூடும். இந்த நிலையில்தான், அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூசகமாக ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில், “மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டும் வேட்புமனு வந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் பாராட்டுக்குரிய சாதனைகளை அண்ணாமலை செய்திருக்கிறார். மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசென்றதிலும், கட்சியை கிராமந்தோறும் கொண்டுசென்றதிலும் அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலையின் ஒருங்கிணைப்புத் திறனை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும்” என்று அமித் ஷா குறிப்பிட்டிருக்கிறார்.