அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டு வாரங்களுக்கு முன்பாக டெல்லிக்குச் சென்று அமித் ஷாவை நேரில் சந்தித்தபோதே, அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகப் பேச்சுக்கள் அடிபட்டது.
ஒருபக்கம், 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூற, மறுபக்கம் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க, இடையில் கூட்டணி குறித்து டெல்லி தலைமை முடிவெடுக்கும், மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் நான் இல்லை என அண்ணாமலை ஒதுங்க, இவை ஒட்டுமொத்தமாக அதிமுக – பாஜக கூட்டணி விவாதத்தைச் சுற்றியே அமைந்தது.

இத்தகைய அரசியல் பரபரப்பான சூழலில் இரண்டு நாள் பயணமாக அமித் ஷா சென்னை வருகிறார் என்றதும் கூட்டணி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் உலாவின. இந்த நிலையில், நேற்றிரவு (ஏப்ரல் 10) சென்னை வந்தடைந்த அமித் ஷா, இன்று காலை (ஏப்ரல் 11) பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, குருமூர்த்தியுடன் அவரது இல்லத்தில் அண்ணாமலை நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது போல, அமித் ஷாவும் தமிழிசையைச் சந்தித்த கையோடு நேராக குருமூர்த்தி இல்லத்துக்குச் சென்றார். சுமார் ஒன்றரை மணிநேரமாகக் குருமூர்த்தியுடன் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்திப்பதற்காகக் கிண்டியிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு அமித் ஷா விரைந்தார். இந்த நிலையில்தான், கிண்டி தனியார் ஹோட்டலில் மோடி படத்துடன் வைக்கப்பட்டிருந்த `தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாடு’ என்ற டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதில், வெறும் பாஜக கொடி மட்டும் அடங்கிய டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. மறுபக்கம், பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்பமனு தாக்கலும் கமலாலயத்தில் தொடங்கிவிட்டது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
